இந்திய பயணத்தின் 2வது நாளில் அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கு, குடியரசு தலைவர் மாளிகையில் பாரம்பரிய முறைப்படி சிவப்பு கம்பள வரவேற்பும், அணிவகுப்பு மரியாதையும் அளிக்கப்பட்டது.
அகமதாபாத், ஆக்ரா நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு அமெரிக்க அதிபர் ட்ரம்ப், டெல்லி வந்தடைந்தார். இன்று காலையில் அவருக்கு குடியரசுத் தலைவர் மாளிகையில், பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது.
குதிரைப்படையினர் புடை சூழ பீஸ்ட் காரில் அழைத்து வரப்பட்ட அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் அவரது மனைவி மெலானியாவை, குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், அவரது மனைவி சவிதா கோவிந்த், பிரதமர் மோடி ஆகியோர் வரவேற்றனர். பின்னர் அனைவரும் இணைந்து குழுவாக புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
தொடர்ந்து இரு நாடுகளின் தேசிய கீதங்கள் இசைக்கப்பட்டன. அதன் பின்னர் துப்பாக்கி குண்டுகள் முழங்க அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கு முப்படைகள் சார்பில் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது.
இதையடுத்து மத்திய அமைச்சர்கள், முப்படைகளின் தளபதிகள், உயர் அதிகாரிகள் டிரம்புக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர். தொடர்ந்து அமெரிக்க குழுவினர் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர். அதன் பின்னர் மகாத்மா காந்தியின் நினைவிடம் அமைந்துள்ள ராஜ்காட் பகுதிக்கு டிரம்ப் தம்பதியர் புறப்பட்டு சென்றனர். அவர்களை குடியரசுத் தலைவர், அவரது மனைவி, பிரதமர் ஆகியோர் வழியனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து ராஜ்காட் சென்றடைந்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் மெலானியா ட்ரம்ப் ஆகியோர், மகாத்மா காந்தி நினைவிடத்தில் மலர்வளையம் வைத்தும், மலர்தூவியும் மரியாதை செலுத்தினர்.
இதையடுத்து அங்கிருந்த பார்வையாளர்கள் பதிவேட்டில் கையெழுத்திட்ட அமெரிக்க அதிபர் ட்ரம்ப்புக்கு, காந்தி சிலை நினைவுப் பரிசாக வழங்கப்பட்டது. தொடர்ந்து அதிபர் ட்ரம்பும், அவரது மனைவி மெலானியாவும் இணைந்து அங்கு மரக்கன்று நட்டனர்.