பிரதமர் மோடியின் தலைமையில் இந்தியா உலக அரங்கில் முன்னணி நாடாகவும் பொருளாதார வல்லரசாகவும் வளர்ந்துள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் பாராட்டு தெரிவித்துள்ளார்.
இரண்டுநாள் பயணமாக இந்தியா வந்துள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப், நேற்று அகமதாபாத் வந்து சேர்ந்தார். மனைவி மெலனியாவுடன் வந்து இறங்கிய அமெரிக்க அதிபர் டிரம்பை, பிரதமர் மோடி ஆரத் தழுவி வரவேற்றார். டிரம்ப் தம்பதியும், மோடியும் சபர்மதி ஆசிரமத்திற்கு சென்று காந்தி வாழ்ந்த இடத்தைப் பார்வையிட்டனர். ஆசிரமத்தில் இருந்த ராட்டையை மெலனியாவுடன் இணைந்து டிரம்ப் இயக்கினார்.
இதனைத் தொடர்ந்து, சர்தார் வல்லபாய் பட்டேல் கிரிக்கெட் மைதானத்தில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய டிரம்ப், பல்வேறு மதத்தினரும் ஒற்றுமையாக வாழும் நாடான இந்தியாவின் வளர்ச்சி மற்ற நாடுகளுக்கு உதாரணமாக இருப்பதாகத் தெரிவித்தார். அமெரிக்கா எப்போதும் இந்தியாவின் நம்பிக்கையான கூட்டாளியாக இருக்கும் என்றும் உறுதி அளித்தார்.
முன்னதாக பேசிய பிரதமர் நரேந்திர மோடி, இந்தியா - அமெரிக்கா நட்புறவு பன்னெடுங்காலம் நீடிக்க வேண்டும் என்றார். இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக மற்றும் இராணுவக் கூட்டாளியாக அமெரிக்கா திகழ்வதாகவும் தகவல் தொழில்நுட்பத்துறை ஒத்துழைப்பை விரிவுபடுத்த உள்ளதாகவும், விளையாட்டுத்துறையில் இணைந்து செயல்பட உள்ளதாகவும் தெரிவித்தார்.
விமானம் மூலம் ஆக்ரா சென்ற டிரம்ப்பை உத்தரபிரதேச ஆளுநர் ஆனந்திபென் பட்டேல், முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் வரவேற்றனர். தாஜ்மஹாலை மெலனியாவும், டிரம்பும் கைகோர்த்து நடந்து சென்று ரசித்தனர்.
அகமதாபாத், ஆக்ரா நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு அதிபர் டிரம்ப் டெல்லி சென்றடைந்தார்.