உத்தரபிரதேசத்தில் 1250 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்த பிரதமர் மோடி, குடியுரிமை திருத்த சட்டத்தில் இருந்து அரசு பின்வாங்காது என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலத்திலுள்ள சொந்த மக்களவைத் தொகுதியான வாரணாசியில் பிரதமர் மோடி சுற்றுப்பயணம் செய்து, ஆயிரத்து 254 கோடி ரூபாய் மதிப்பிலான 50 திட்டங்களை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.
வாரணாசி மற்றும் மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைனி, ஓம்காரஸ்வர் ஆகிய இடங்களிலுள்ள 3 ஜோதிர்லிங்க கோயில்களை இணைக்கும் வகையில் விடப்பட்டுள்ள மகா ஹால் எக்ஸ்பிரஸ் தனியார் விரைவு ரயில் போக்குவரத்தையும் அவர் தொடங்கி வைத்தார்.
மேலும் 430 படுக்கைகளுடன் ஏற்படுத்தப்பட்டுள்ள சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையை திறந்து வைத்ததுடன், பண்டிதர் தீன்தயாள் உபாத்யாயா நினைவு மையத்தை நாட்டுக்கு அர்ப்பணித்து, அவரது 63 அடி உருவ சிலையை திறந்து வைத்தார்.
பின்னர் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370ஆவது சட்டப் பிரிவை ரத்து செய்யும் முடிவு, குடியுரிமை திருத்த சட்ட முடிவு ஆகியவற்றை நாட்டின் நலன் கருதியே மத்திய அரசு எடுத்ததாக கூறினார். பல்வேறு நெருக்கடிகளுக்கு இடையேயும் அந்த முடிவில் அரசு உறுதியாக உள்ளதாகவும், அதில் இருந்து அரசு பின்வாங்காது என்றும் மோடி குறிப்பிட்டார்.
அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்காக அரசால் அறக்கட்டளை ஏற்படுத்தப்பட்டதை சுட்டிக்காட்டிய மோடி, அந்த அறக்கட்டளை தனது பணிகளை விரைந்து செய்து வருவதாகவும் கூறினார்.
அயோத்தி ராமர் கோயில் விவகாரத்தில் மத்திய அரசு புதிதாக இன்னொரு மிகப்பெரிய முடிவை எடுத்திருப்பதாக கூறிய மோடி, அங்கு ஏற்கெனவே சர்ச்சைக்குரிய பகுதியில் அரசால் கையகப்படுத்தப்பட்ட 67 ஏக்கர் நிலம் முழுவதும் ராமர் கோயில் அறக்கட்டளையிடம் ஒப்படைக்கப்படும் எனவும் அறிவித்தார்.
இந்திய நாடானது, யார் வெற்றி பெற்றனர், யார் தோல்வியடைந்தனர் என்பதை கொண்டு ஒருபோதும் வரையறுக்கப்பட்டது இல்லை என்றும், மக்களின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தாலேயே நாடு வரையறை செய்யப்பட்டது எனவும் குறிப்பிட்டார்.