புதிய வருவாய்ப் பங்கீட்டு முறைப்படி நிலுவைத் தொகையை செலுத்தாத தொலைத்தொடர்பு மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் 4 லட்சம் கோடி ரூபாயை நேற்றிரவுக்குள் செலுத்த மத்திய அரசு உத்தரவிட்டிருந்த நிலையில், 10 ஆயிரம் கோடி ரூபாயை வரும் 20ம் தேதிக்குள் செலுத்தி விடுவதாக ஏர்டெல் நிறுவனம் உறுதியளித்துள்ளது.
தொலைத்தொடர்பு சேவை வழங்கி வரும் 15 நிறுவனங்கள் உரிமக் கட்டணமாக 92 ஆயிரத்து 642 கோடி ரூபாயும், அலைக்கற்றை பயன்பாட்டுக்காக 55 ஆயிரத்து 54 கோடி என மொத்தம் ஒரு லட்சத்து 47 லட்சம் கோடி செலுத்த வேண்டியுள்ளது. இதில், அதிகபட்சமாக, வோடஃபோன் ஐடியா நிறுவனம் 53 ஆயிரத்து 38 கோடியும், பார்தி ஏர்டெல் நிறுவனம் 35 ஆயிரத்து 586 கோடியும் நிலுவை வைத்துள்ளன.
டாடா டெலிகாம் நிறுவனம் 13 ஆயிரத்து 823 கோடியும் நிலுவைத் தொகை வைத்துள்ளன. இவை தவிர பொதுத்துறை நிறுவனங்களான கெயில் ஒரு லட்சத்து 72 ஆயிரம் கோடியும், ஆயில் இந்தியா நிறுவனம் 48 ஆயிரத்து 489 கோடியும், பவர்கிரிட் கார்ப்பரேஷன் நிறுவனம் 22 ஆயிரத்து 63 கோடியும் மத்திய அரசுக்கு நிலுவைத் தொகை வழங்காமல் உள்ளன.
இவை தவிர மேலும் சில நிறுவனங்களும் வைத்திருக்கும் நிலுவைத் தொகை கிட்டத்தட்ட 4 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு உள்ளது. இந்த நிலுவைத் தொகையை ஜனவரி 20ம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என உச்ச நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் தற்போது வரை தொலைத்தொடர்பு நிறுவனங்கள் அத்தொகையை முழுமையாகச் செலுத்தவில்லை. இதற்கிடையே, நிலுவைத் தொகை வசூலிக்கப்படும் வரை நடவடிக்கை எடுக்க வேண்டாம் என தொலைதொடர்பு துறையின் உரிம நிதிப்பிரிவு உத்தரவு ஒன்றைப் பிறப்பித்திருந்தது.
இந்நிலையில் இந்த நிலுவைத் தொகையை செலுத்துவதற்கு கால அவகாசம் கோரி, பார்தி ஏர்டெல், வோடஃபோன் ஐடியா உள்ளிட்ட நிறுவனங்கள் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தன. இந்த மனு நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன்பு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, நிலுவைத் தொகையை வசூலிக்குமாறு உத்தரவிட்டிருந்தும் அதனை மதிக்காத தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு நீதிபதிகள் கடும் கண்டனத்தை தெரிவித்தனர்.
மேலும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் அதை நிறுத்திவைத்த மத்திய அரசின் அதிகாரி யார் என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், ஒரு அதிகாரி தன்னைத்தானே நீதிபதி என நினைத்துக் கொண்டு உத்தரவை நிறுத்திவைத்தால், இந்த நாட்டில் சட்டம் ஏதாவது எஞ்சியுள்ளதா என்று கேட்டனர்.
உச்சநீதிமன்றத்தின் உத்தரவை நிறுத்திவைத்த, மத்திய அரசு அதிகாரி தனது உத்தரவை திரும்பப் பெறவில்லை எனில் சிறைக்கு செல்ல நேரிடும் என்றும் எச்சரித்தனர். யார் அந்த அதிகாரி, அவர் எங்கிருக்கிறார், அவரை நீதிமன்றத்தில் கொண்டுவந்து நிறுத்துங்கள் எனவும் ஆவேசத்துடன் நீதிபதிகள் கூறினர். மேலும், நிலுவைத் தொகையை, அடுத்த விசாரணை நடைபெறும் மார்ச் 17ம் தேதிக்குள் செலுத்திவிட வேண்டும் என்று தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதையடுத்து, நிலுவைத் தொகையை உடனடியாக செலுத்துமாறு தொலைத் தொடர்புச் சேவை நிறுவனங்களுக்கு மத்திய தொலைத் தொடர்புத் துறை சுற்றறிக்கை அனுப்பியது. அதில் மேற்கண்ட தொகையை நேற்றிரவுக்குள் செலுத்த வேண்டும் என உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், வரும் 20-ஆம் தேதிக்குள் 10 ஆயிரம் கோடி ரூபாயை செலுத்தி விடுவதாகவும், எஞ்சிய தொகையை மார்ச் 17ம் தேதிக்குள் செலுத்தி விடுவதாகவும் பார்தி ஏர்டெல் நிறுவனம் பதிலளித்துள்ளது.
டாடா நிறுவனம் மார்ச் 17ம் தேதிக்குள் முழுத் தொகையையும் செலுத்தி விடுவதாக உத்தரவாதம் அளித்துள்ளது. ஆனால், வோடஃபோன் ஐடியா நிறுவனம், நிலுவைத் தொகையை உடனடியாக ஒரே தவணையில் செலுத்துமாறு தங்களைக் கட்டாயப்படுத்தினால் நிறுவனத்தை மூட வேண்டியிருக்கும் என்று கடந்த மாதமே தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
watch more on : https://www.youtube.com/channel/UC8Z-VjXBtDJTvq6aqkIskPg