10-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான செய்முறைத் தேர்வுகளை பிப்ரவரி 21 முதல் 28-ம் தேதிக்குள் நடத்தி முடிக்க அரசுத் தேர்வுகள் இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.
நடப்பு கல்வியாண்டுக்கான 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு, புதிய பாடத்திட்டத்தின் கீழ் மார்ச் 27-ம் தேதி தொடங்குகிறது. இந்நிலையில், பள்ளி சார்ந்த மாணவர்களுக்கு பிப்ரவரி 21 முதல் 28 வரையிலும், தனித்தேர்வர்களுக்கு பிப்ரவரி 26 முதல் 28-ம் தேதி வரையிலும் ஏதேனும் ஒரு நாளில் செய்முறை பொதுத்தேர்வுகளை நடத்தி முடித்து, மதிப்பெண் பட்டியலை மார்ச் 3-க்குள் மாவட்டக்கல்வி அலுவலரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று அனைத்துப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் அரசுத் தேர்வுகள் இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.
தனித்தேர்வர்கள் தாங்கள் பயின்ற பள்ளியில் பிப்ரவரி 26 முதல் 28 வரை ஏதேனும் ஒரு நாளில் தேர்வு எழுத வேண்டும் என்றும் அறிவித்துள்ளது.