ஆண்டுக்கு இருமுறை நீட் தேர்வு நடத்துவது குறித்தும், பேனா பேப்பர் முறைக்கு மாறாக கணினிகளில் ஆன்லைன் முறையில் தேர்வு நடத்துவது பற்றியும், தேசிய தேர்வு முகமை, சுகாதாரம், கல்வித் துறை அமைச்சக மூத்த அதிகாரிகள் வரும் திங்கட்கிழமை ஆலோசனை நடத்த உள்ளனர்.
கணினிகள் மூலம் நடத்தப்படும், பொறியியல் படிப்புகளுக்கான ஜேஇஇ மெயின் தேர்வை ஆண்டுக்கு 2 முறை நடத்த 2019ஆம் ஆண்டில் மத்திய அரசு முடிவு செய்தது.
அதை நடப்பு ஆண்டில் 4 முறையாக அதிகரித்துள்ளது. ஆனால் இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு ஆண்டுக்கு ஒருமுறை பேப்பர்-பேனா முறையில் நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், நீட் தேர்வை ஆண்டுக்கு இரண்டு முறை நடத்துவது பற்றியும், டிஜிட்டல் முறையில் நடத்துவது பற்றியும் வரும் திங்கட்கிழமை ஆலோசனை நடைபெற உள்ளது.
இதில், சுகாதாரத்துறை, கல்வித் துறை மற்றும் தேசிய தேர்வு முகமை மூத்த அதிகாரிகள் பங்கேற்கின்றனர்.
ஆண்டுக்கு இருமுறை நீட் தேர்வு என்பது குறித்து பொதுவாக வரவேற்பு இருந்தாலும், பேப்பர்-பேனா முறையை மாற்றுவது பற்றி இருவிதமான கருத்துகள் உள்ளன.