தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்கள் இலவசமாக சேருவதற்காக இன்று முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
இலவச மற்றும் கட்டாயக்கல்வி உரிமை சட்டப்படி சிறுபான்மை அல்லாத தனியார் பள்ளிகளில், 25சதவீத இடங்களில் ஏழை மாணவர்கள் இலவசமாக சேர்க்கப்படுகிறார்கள். எல்.கே.ஜி அல்லது ஒன்றாம் வகுப்பில் சேரும் இவர்கள் எட்டாம் வகுப்பு வரை கல்விக்கட்டணம் செலுத்தத் தேவையில்லை.
மாநிலம் முழுவதும் உள்ள 10ஆயிரம் தனியார் பள்ளிகளில், 1லட்சத்து 12 ஆயிரம் இடங்கள் இம்மாணவர்களுக்கு உள்ளது. இந்த கல்வி ஆண்டுக்கான சேர்க்கை இன்று தொடங்கி செப்டம்பர் 25ந்தேதிவரை நடைபெறுவதாகவும், https://rte.tnschools.gov.in/home?returnUrl=%2Freg-parent என்னும் பள்ளிக்கல்வி இணைய தளத்தில் விண்ணப்பிக்கவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
விண்ணப்பதாரர் தங்கள் இருப்பிடத்துக்கு அருகே உள்ள 5 பள்ளிகளில் விண்ணப்பிக்கலாம் எனவும், ஒவ்வொரு பள்ளியிலும் நிர்ணயித்த இடங்களைவிட அதிகமாக விண்ணப்பங்கள் வந்து சேர்ந்தால் வெளிப்படையான முறையில் குலுக்கல் நடத்தி மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.