பள்ளிக்கு முற்றாக வராதவர்கள், டிசி வாங்கிக் கொண்டு இடைநின்றவர்கள், தேர்வு எழுத பதிவு செய்தபின் இயற்கை எய்தியவர்கள் என 5,248 மாணாக்கர்களுக்கு தேர்வு முடிவுகள் வெளியிடப்படவில்லை என அரசுத் தேர்வுத்துறை இயக்குநர் விளக்கம் அளித்துள்ளார்.
10ஆம் வகுப்பில் 100 சதவீதம் பேர் தேர்ச்சி என அறிவிக்கப்பட்ட நிலையில், 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணாக்கர்களுக்கு தேர்வு முடிவுகள் வெளியாகவில்லை என தகவல் பரவியது. இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள அரசுத் தேர்வுகள் இயக்குநர், பொதுத்தேர்வு எழுத பதிவு செய்த மாணாக்கர்களின் எண்ணிக்கை 9,45,077 என்றும், தேர்வு முடிவு வெளியிடப்பட்ட மாணாக்கர்களின் எண்ணிக்கை 9,39,829 என்றும் தெரிவித்துள்ளார்.
விடுபட்ட 5,248 மாணாக்கர்களில், காலாண்டு, அரையாண்டு தேர்வுகள் மற்றும் பள்ளிகளுக்கு முற்றாக வராதவர்களின் எண்ணிக்கை 4359 என்றும், டிசி வாங்கிக் கொண்டு இடைநின்ற மாணாக்கர்களின் எண்ணிக்கை 658 என்றும், பொதுத்தேர்வு எழுத பதிவு செய்த பின் காலமான மாணாக்கர்களின் எண்ணிக்கை 231 என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.