மாணவர்களின் உயிரோடு விளையாடுவதைப் பல்கலைக்கழக மானியக் குழுவும், மனிதவள மேம்பாட்டு அமைச்சகமும் நிறுத்திக் கொள்ள வேண்டும் என மகாராஷ்டிர உயர்கல்வித் துறை அமைச்சர் உதய் சாமந்த் தெரிவித்துள்ளார்.
கொரோனா சூழலில் பல்கலைக்கழக மாணவர்களுக்குத் தேர்வுகளை நடத்த இயலாது எனக் கூறிப் பல்கலைக்கழக மானியக் குழுவுக்கு மகாராஷ்டிரம், தமிழகம், புதுச்சேரி, பஞ்சாப், அரியானா உள்ளிட்ட மாநிலங்கள் கடிதம் எழுதியுள்ளன.
ஆனால் உயர்கல்வி இறுதியாண்டு பயிலும் மாணவர்களுக்குக் கட்டாயம் தேர்வுகளை நடத்த வேண்டும் எனப் பல்கலைக்கழக மானியக் குழு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் மகாராஷ்டிர உயர்கல்வித் துறை அமைச்சர் உதய் சாமந்த் டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், பாதுகாப்பான இடமான ஆளுநர் மாளிகையில் கூட கொரோனா நுழைந்துவிட்ட நிலையில், இன்னும் தேர்வுகளை நடத்த வேண்டும் எனப் பல்கலைக்கழக மானியக் குழு விரும்புவது ஏன் எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.