தமிழகத்தில் நீட் தேர்வு எழுதவுள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கான ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் ஆகஸ்ட் மாதம் வரை நீட்டிப்பு செய்யப்பட்டிருப்பதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
நீட் தேர்வு வரும் 26ம் தேதியன்று நடத்த தீர்மானிக்கப்பட்டிருந்தது. அந்தத் தேர்வு, கொரோனா பரவல் உள்ளிட்ட காரணங்களுக்காக செப்டம்பர் மாதம் 13ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நீட் தேர்வை இந்த ஆண்டு அரசுப் பள்ளி மாணவர்கள் 7 ஆயிரம் பேர் எழுதவுள்ளனர். அவர்களுக்கு இ-பாக்ஸ் (e-box) என்ற நிறுவனத்தின் சார்பில் ஆன்-லைன் வழியில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
அந்த பயிற்சி இம்மாதம் இரண்டாவது வாரத்துடன் நிறைவடைய இருந்தது. நீட் தேர்வு ஒத்திவைக்கப்பட்டு இருப்பதை கருத்தில் கொண்டு, அந்த பயிற்சி வகுப்புகள் ஆகஸ்ட் வரை நீட்டித்திருப்பதாக பள்ளி கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.