நீட் மற்றும் ஜே.இ.இ. தேர்வுகளை நடத்துவதா அல்லது ஒத்திவைப்பதா என்பது குறித்து கல்வித் துறை நிபுணர்களின் அறிக்கையை பரிசீலித்து முடிவெடுக்கப்படும் என்று மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்கிரியால் அறிவித்துள்ளார்.
ஐஐடி உள்ளிட்ட உயர்கல்வி நிறுவனங்களில் எஞ்சினியரிங் தொழில் படிப்புக்கான ஜே,இ.இ முதனமை நுழைவுத் தேர்வை இம்மாதம் 18ம் தேதி முதல் 23ம் தேதிவரை நடத்தப்படும் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.
இதே போல் மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு ஜூலை 26ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் கொரோனா பரவல் காரணமாக தேர்வுகளை ஒத்தி வைக்க மாணவர்களும் பெற்றோரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலையில் தேர்வுகளை நடத்துவதற்கான நிலைமையை ஆய்வு செய்ய அதிகாரிகள் மற்றும் கல்வித்துறையினர் அடங்கிய குழு அமைக்கப்பட்டது. இக்குழு பரிந்துரைகளை இன்று சமர்ப்பிக்க உள்ளது.