பள்ளி மாணவர்களுக்கு அடுத்த சில மாதங்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் தவிர்க்க முடியாதது என்ற சூழலில், அதில் கொண்டு வரப்பட வேண்டிய மாற்றங்கள் குறித்து விளக்குகிறது இந்த செய்தி...
கொரோனா பரவல் அச்சம் காரணமாக ஏறக்குறைய அனைத்து தனியார் பள்ளிகளும் ஆன்லைனில் வகுப்புகளை துவங்கிவிட்டன. ஆன்லைன் வகுப்புகள் நடத்த வேண்டுமா? வேண்டாமா என விவாதங்கள் ஒருபுறம் இருக்க, அடுத்த சில மாதங்களுக்கு ஆன்லைன் வகுப்புகளைத் தவிர்க்கவே முடியாது என்ற சூழல் ஏற்பட்டுள்ளது.
8ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கே 7 மணி நேர ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படும் நிலையில், ஆன்லைன் வகுப்புகளை ஒழுங்குபடுத்த சில மாற்றங்கள் முன்னெடுக்கப்பட வேண்டியது அவசியம் என்று பல்வேறு மட்டங்களிலும் குரல் எழுந்துள்ளது.
சாதாரண நாட்களில் பள்ளிகள் இயங்குவது போலவே ஆன்லைன் வகுப்புகளுக்கும் காலை 8 மணி முதல் மாலை 3 மணி வரை வகுப்புகள் எடுப்பதற்கான அட்டவணைகள் போடப்பட்டு வகுப்பு வாரியாக பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
இதனால் மாணவர்களுக்கு ஏற்படும் மன உளைச்சலை தவிர்ப்பதற்காக அதற்கென தனி உளவியல் வகுப்பும் ஆன்லைனிலேயே எடுக்கப்பட்டு வருகிறது. அதற்கென தனி கட்டணமும் வசூலிக்கப்படுகிறது.
ஆன்லைன் வகுப்புகளை நடத்துவதே பெற்றோர்களிடமிருந்து பணத்தை வசூலிக்க பள்ளிகள் நடத்தும் நாடகம் தான் என குற்றச்சாட்டுகள் ஒருபுறமிருக்க, தொடர்ந்து 8 மணி நேரம் மொபைல், லேப்டாப் திரைகளை பார்ப்பதனால் மாணவர்களுடைய விழிக்கரு கடுமையாக பாதிக்கப்படும் என்று சுட்டிக் காட்டுகின்றனர் மருத்துவர்கள்.
கண்களில் ஏற்படும் பாதிப்பைத் தவிர்ப்பதற்கு முடிந்தவரையில் செல்போனை டிவியுடன் இணைத்து பெரிய திரையில் பார்க்கலாம் அல்லது மொபைலில் இருக்கும் Night mode மற்றும் Blue Light Filter போன்றவற்றையும் பயன்படுத்தலாம் என அறிவுறுத்துகின்றனர் மருத்துவர்கள்.
குறைந்தது 8ம் வகுப்பு வரை ஆன்லைன் வகுப்பு தேவையில்லை என வலியுறுத்தும் கல்வியாளர்கள், சரிசமமான இணைய வசதி, இணைய வேகம் போன்றவற்றை அனைத்து தரப்பினருக்கும் உறுதிப்படுத்திய பின்னரே ஆன்லைன் வகுப்புகளை தொடங்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர்.
பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில், கல்விக் கட்டணம் வசூலிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதால், ஆன்லைன் வகுப்புகள் மூலம் அதை ஈடுகட்டப் பார்க்கும் பள்ளிகளின் வியாபார நுணுக்கத்தால், மாணவர்களின் மனநிலை, சமநிலை தவறக்கூடிய அபாயமும் ஏற்பட்டுள்ளது.