பள்ளி மாணவ, மாணவியருக்கு ஆன்லைன் மூலம் வகுப்புக்கள் நடத்தத் தடை விதிக்கக் கோரி உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சென்னையை சேர்ந்த, இரு மாணவர்களின் தாய் ஒருவர் தாக்கல் செய்துள்ள மனுவில், ஆன்லைன் வகுப்புகளில் கலந்து கொள்ள மாணவ, மாணவியர் முயற்சிக்கும்போது குறுக்கிடும் ஆபாச இணைய தளங்களால் கவனம் சிதைவதாக கூறியுள்ளார்.
மாநிலத்தில் 8 சதவீத வீடுகளில் மட்டுமே இன்டர்நெட் இணைப்புடன் கம்ப்யூட்டர்கள் உள்ளதாகவும், டிஜிட்டல் முறையில் பாடம் நடத்துவதால் நகர்ப்புற-கிராமப்புற மற்றும் ஏழை- பணக்கார மாணவர்களுக்கு இடையில் சமமற்ற நிலை உருவாகியுள்ளதாக மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முறையான டிஜிட்டல் உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாததால், மாணவர்களும், ஆசிரியர்களும் சவால்களை சந்தித்துள்ளதாகவும், பல இடையூறுகள் உள்ளதாகவும் மனுவில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
தவறான இணையதளங்களை மாணவ, மாணவியர் அணுக இயலாத வகையில் விதிகளை வகுக்கும் வரை ஆன்லைன் வகுப்புக்களுக்கு தடை விதிக்க மனுதாரர் கோரியுள்ளார். இந்த மனு, விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.