சென்னையை அடுத்த ஆவடி ராணுவ கனரக வாகன தொழிற்சாலையில், பணியில் இருந்த ராணுவ வீரர், சக ராணுவ வீரரை துப்பாக்கியால் சுட்டதில் அவர் உயிரிழந்தார். துப்பாக்கியால் சுட்ட வீரர் மன அழுத்த நோயால் பாதிக்கப்பட்டவர் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
சென்னையை அடுத்த ஆவடியில் பீரங்கிகளைத் தயாரிக்கும் திண் ஊர்தி தொழிற்சாலை இயங்கி வருகிறது. மத்திய அரசின் கட்டுப்பாட்டிலுள்ள இந்த தொழிற்சாலையில் முன்னாள் ராணுவ வீரர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
வியாழக்கிழமை நள்ளிரவு ஒரு மணியளவில் பாதுகாப்புப் பணியில் இருக்கும் காவலாளிகள் ஓய்வு அறையிலிருந்து துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டுள்ளது.
சுற்றியிருந்தவர்கள் ஓடிச் சென்று பார்த்தபோது, திரிபுராவைச் சேர்ந்த நிலம்பசின்ஹா என்ற வீரர் கையில் துப்பாக்கியுடன் நின்று கொண்டிருந்தார். அந்தத் துப்பாக்கி 7 ரவுண்டுகள் சுடப்பட்டிருந்தது. அறையில் பார்த்தபோது, குண்டுகள் பாய்ந்து சக வீரரான ஹிமாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த கிரிஜேஸ்குமார் ரத்த வெள்ளத்தில் இறந்துகிடந்துள்ளார்.
நிலம்பசின்ஹாவைக் மடக்கிப் பிடித்து கைது செய்த போலீஸார் அவர் பயன்படுத்திய துப்பாக்கியையும் மீதமுள்ள குண்டுகளையும் பறிமுதல் செய்தனர். உயிரிழந்த வீரர் கிரிஜேஸ்குமாரின் உடல் மீட்கப்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டது. சம்பவம் நடந்த இடத்துக்கு ஆவடி வட்டாட்சியர் சங்கிலி மற்றும் காவல்துறை அதிகாரிகள் விரைந்தனர்.
கீமோஃபீனியா எனும் மனநோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலம்பசின்ஹாவுக்கு இந்தப் பணி மாறுதலில் விருப்பம் இல்லை என்றும் அதனால் ஏற்பட்ட மன அழுத்தத்தாலேயே கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டுள்ளார் என்றும் போலீசார் தெரிவிக்கின்றனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.