சென்னையில் உள்ள மத்திய மாநில அரசு அலுவலகங்களில், தேசிய கொடியேற்றி வைத்து குடியரசு தினவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அரசு கணக்கு தணிக்கை அலுவலகத்தில் தலைமை கணக்காயர்கள் அம்பலவாணன், சினேகலதா ஆகியோர் கொடி ஏற்றி மரியாதை செலுத்தினர்.
சென்னை பெரம்பூரில் உள்ள ரயில்வே மைதானத்தில், தெற்கு ரயில்வே பொதுமேலாளர் ஜான் தாமஸ் தேசியக் கொடியினை ஏற்றிவைத்து, ரயில்வே பாதுகாப்பு படையினரின் அணி வகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்தியன் ஆயில் அலுவலகத்தில் நிர்வாக இயக்குநர் ஜெயதேவன் தேசியக்கொடிஏற்றி, அலுவலக பாதுகாவலர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுகொண்டார்.
நுங்கம்பாக்கத்தில் உள்ள ஜி.எஸ்.டி மற்றும் கலால் துறை அலுவலகத்தில் தமிழகம் மற்றும் புதுவை தலைமை ஆணையர் கண்ணன் தேசியக்கொடியேற்றிவைத்தார்.
நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் தமிழகம் மற்றும் புதுவை வருமான வரித்துறை முதன்மை ஆணையர் அனு ஜே சிங் தேசியக்கொடியேற்றி வைத்தார்.
சென்னை நந்தனத்தில் உள்ள நவாப் பாஸிலத்துனிசா பேகம் சாஹிபா மஸ்ஜித் பள்ளிவாசலில் முதல் முறையாக குடியரசு தினத்தை கொண்டாடும் விதமாக தேசிய கொடி ஏற்றப்பட்டது. தமிழ்நாடு அரசு தலைமை காஜி முகம்மது சலாஹுதீன் அயுப் கொடியேற்றி இனிப்புகள் வழங்கினர். இதில் ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர்.
சென்னை பெருநகர மாநகராட்சி அலுவலகமான ரிப்பன் மாளிகையில் ஆணையர் பிரகாஷ் தேசிய கொடிஏற்றி வைத்து, மாநகராட்சி பள்ளி மாணவர்கள் மற்றும் சிறார்களின் அணிவகுப்பை பார்வையிட்டார்.
குடியரசு தினத்தையொட்டி சென்னையில் கட்சி அலுவலகங்களில் தேசிய கொடியேற்றி இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.
தமிழக பாஜக தலைமையகமான கமலாலயத்தில் திரைப்பட இயக்குனர் கஸ்தூரி ராஜா தேசிய கொடி ஏற்றி இனிப்பு வழங்கினார்.
தியாகராய நகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்டு அலுவலகமான பாலன் இல்லத்தில் மூத்த தலைவர் தா. பாண்டியன் தேசிய கொடி ஏற்றி வைத்தார். இதில் மாநில செயலாளர் முத்தரசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், குடியரசு தினத்தையொட்டி, மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் தலைமையில், நிர்வாகிகளும் தொண்டர்களும் தேசிய ஒருமைப்பாடு உறுதிமொழி ஏற்றனர்.
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே ஏ செங்கோட்டையன் சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள பாரத சாரண, சாரணியர் இயக்க அலுவலகத்தில் தேசிய கொடியேற்றி வைத்து, சாரணர்களுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், சாரண சாரணியர் இயக்கத்துக்கு அரசு சார்பில் ரூபாய் 1 கோடி நிதியுதவி வழங்கப்படும் என்றார்.