வருமானத்தை மறைத்ததாக தொடரப்பட்ட வழக்கில் கார்த்திக் சிதம்பரம் அவரது மனைவி ஸ்ரீநிதி ஆகியோருக்கு எதிராக குற்றச்சாட்டு பதிவு செய்ய வரும் 27-ஆம் தேதி வரை தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முட்டுக்காட்டில் சொத்துகள் விற்பனையில் 7 கோடியே 73 லட்சம் ரூபாய் வருமானத்தை மறைத்ததாக வருமான வரித்துறை தொடர்ந்த வழக்கு எழும்பூர் நீதிமன்றத்தில் இருந்து எம்.பி. எம்.எல்.ஏ.க்கள் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது.
குற்றச்சாட்டு பதிவுக்காக இருவரும் இன்று ஆஜராக சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் வழக்கு சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டதற்கு எதிரான கார்த்திக் சிதம்பரம் தரப்பினரின் வழக்கில் குற்றச்சாட்டுப் பதிவுக்கு இடைக்காலத் தடை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.