சென்னை நடைபெறும் புத்தகக் காட்சியில் இடம்பெற்றுள்ள கீழடி அகழாய்வு கண்காட்சி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
43 வது சென்னை புத்தகக் காட்சி நந்தனம் Y.M.C.A. மைதானத்தில் நடைபெற்று வருகிறது. தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தின் சார்பில் நடத்தப்படும் இந்த புத்தகக் காட்சியில் சுமார் 750 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. வேலை நாள்களில் பிற்பகல் 3 மணி முதல் இரவு 9 மணி வரையிலும், விடுமுறை நாள்களில் காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் புத்தகக் காட்சி நடைபெறுகிறது.
இந்த புத்தகக் காட்சியில் சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் தேவையான ஒரு கோடிக்கும் மேலான நூல்கள் இடம்பெற்றுள்ளன. குழந்தைகளுக்கு தேவையான நூல்கள், பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு தேவையான நூல்கள், வரலாற்று நூல்கள், நாவல்கள், அரசியல் தலைவர்கள் குறித்த நூல்கள் என அனைத்தும் ஒரே இடத்தில் இடம்பெற்றுள்ளது வாசகர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளது.
புத்தகக் காட்சிக்கு புதிதாக வரும் இளைஞர்களை ஈர்த்துள்ள பல லட்சம் கணக்கிலான நூல்கள் அவர்களிடம் வாசிப்பு பழக்கத்தையும் ஆர்வத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்த புத்தகக் காட்சியில் இடம்பெற்றுள்ள ’கீழடி அகழாய்வு கண்காட்சி’ பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. மூன்றாயிரம் சதுரடியில் அமைக்கப்பட்டுள்ள இந்த கண்காட்சியில் கீழடியில் கண்டெடுக்கப்பட்ட பொருள்கள் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசின் தொல்லியல் துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள இந்த கண்காட்சி அரங்கில் கீழடியில் கண்டெடுக்கப்பட்ட கீழடி அகழாய்வு குழிகள், கீழடி அகழாய்வு உறை கிணறு , சுடுமண்ணாலான குழாய் , நீர் மேலாண்மை உள்ளிட்டவைகளின் மாதிரிகள் இடம்பெற்றுள்ளன. மேலும் திமிலுள்ள காளைகளின் எலும்புகள், சுடுமண் பானைகள், செம்பிலான பொருள்கள், பானை வளைதல் தொழில்நுட்பம், தமிழ் எழுத்துகளால் பொறிக்கப்பட்ட பானை ஓடுகளும் இடம் பெற்றுள்ளன.
கண்காட்சியில் இடம்பெற்றுள்ள கீழடியில் கண்டெடுக்கப்பட்ட பழங்கால பொருள்களை பொதுமக்கள் ஆர்வமுடன் பார்த்துவிட்டு செல்கின்றனர். கீழடியில் கிடைத்த அரிதான பொருள்களை சென்னையில் காண்பது மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாக பார்வையாளர்கள் தெரிவித்தனர்.
தொன்மையான கீழடி நாகரிகத்தை பல லட்சம் பேர் அறிந்துகொள்வதற்கான வாய்ப்பாக இந்த கண்காட்சி அமைந்துள்ளது.