சென்னை தாம்பரம் காவல் நிலையத்திற்கு ஆட்டோ ஓட்டுனரை இழுத்து வந்த இளைஞர் ஒருவர், சார் , இவரு எங்கப்பா.. சவாரிக்கு வந்த பெண்மணியிடம் நகையை பறிச்சிட்டு வீட்டுக்கு வந்தார்... அவரை பிடிச்சி கொண்டு வந்திருப்பதாக கூறியதால் போலீசார் திகைத்து நின்றனர்..!
திருச்சி குண்டூரை சேர்ந்தவர் 80 வயதான வசந்தா மாரிக்கண்ணு. ஓய்வு பெற்ற ஆசிரியையான இவர் ஹைதராபாத்தில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு சென்று விட்டு விமானத்தில் சென்னை திரும்பி உள்ளார். மீனம்பாக்கத்தில் இருந்து திருச்சி செல்வதற்கு பேருந்தில் ஏறுவதற்காக , தாம்பரம் சாமியார் தோட்டத்தை சேர்ந்த கணேசன் என்பவரது ஆட்டோவில் ஏறியுள்ளார்.
ஆட்டோவை தாம்பரம் பேருந்து நிலையம் கொண்டு செல்லாமல், குரோம்பேட்டை டி.என்.எச்.பி காலனி வழியாக பச்சமலை அழைத்துச்சென்றார் ஆட்டோ ஓட்டுனர் கணேசன். மூதாட்டியை மிரட்டி அவர் கழுத்தில் அணிந்திருந்த இரு தங்க சங்கிலிகளையும் வெள்ளி டாலர் அணிந்த மாலையையும் பறித்துக் கொண்டு மூதாட்டியை அங்கே இறக்கி விட்டு தப்பிச்சென்றதாக கூறப்படுகின்றது
அங்கிருந்து நடந்தே தாம்பரம் காவல் நிலையம் வந்து சேர்ந்த வசந்தா போலீசில் புகார் அளித்தார். இதற்கிடையே மூதாட்டியிடம் பறித்த நகையுடன் வீட்டுக்குச்சென்ற ஆட்டோ ஓட்டுனர் கணேசன், தான் நகையை திருடி கொண்டு வந்திருப்பதாகவும், அதனை அடகு வைத்து குடும்ப செலவுகளுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் குடும்பத்தினரிடம் கூறியுள்ளார்.
இதனை ஏற்காத அவரது மகன் ராமச்சந்திரன், திருட்டு பொருள் நமக்கு வேண்டாம்பா எனக்கூறியதோடு, தனது தந்தை கணேசனை ஆட்டோவில் ஏற்றி காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து திருட்டு நகையுடன் தங்களிடம் ஒப்படைத்ததாக போலீசார் தெரிவித்தனர்.
தந்தை என்றும் பாராமல் நகைப்பறிப்பில் ஈடுபட்ட ஆட்டோ ஓட்டுனர் கணேசனை காவல் நிலியம் அழைத்து வந்த மகன் ராமச்சந்திரனை போலீசார் பாராட்டினர்