சென்னை, வியாசர்பாடியில் மாஞ்சா நூல் கழுத்தை அறுத்து இரண்டரை வயது குழந்தை உள்பட 2 பேர் காயமடைந்த சம்பவத்தில் பட்டங்களை பறக்கவிட்ட சிறுவர்கள் உட்பட 8 பேரை கைது செய்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
கொடுங்கையூரைச் சேர்ந்த பாலமுருகன் மனைவி மற்றும் குழந்தை புகழ்பாலனுடன் வியாசர்பாடி மேம்பாலத்தில் பைக்கில் சென்றுள்ளார். அப்போது திடீரென எதிரே தென்பட்ட மாஞ்சா கயிறு, பைக் டேங்கின் மீது அமர்ந்திருந்த புகழ்பாலனின் கழுத்தை அறுத்ததாகவும், குழந்தைக்கு 7 தையல் போடப்பட்டதாகவும் பாலமுருகன் புகார் அளித்தார்.
அதேபோல், வியாசர்பாடி புதிய மேம்பாலம் அருகே பைக்கில் சென்ற ஜிலானி என்பவரையும் மாஞ்சா நூல் அறுத்ததில் காயமடைந்ததாக புகார் அளிக்கப்பட்டது.
விசாரணையில், பட்டங்களை பறக்கவிட்ட கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்கள் மற்றும் விற்பனையாளர்கள் இருவர் உள்பட 8 பேரை கைது செய்த போலீசார், 100க்கும் மேற்பட்ட பட்டங்கள் மற்றும் மாஞ்சா நூல்களை பறிமுதல் செய்தனர்.