சென்னை குன்றத்தூர் அருகே வங்கி மேலாளர் வீட்டில் சுற்றித்திரிந்த எலிகளை ஒழிக்க பெஸ்ட் கண்ட்ரோல் மூலம் வீடு முழுவதும் மருந்து தெளிக்கப்பட்ட நிலையில் எலி மருந்தை சுவாசித்ததால் உடல் நலக்கோளாறு ஏற்பட்டு இரு குழந்தைகள் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது...
சென்னையை அடுத்த குன்றத்தூர் அடுத்த மணஞ்சேரியை சேர்ந்தவர் கிரிதரன். தனியார் வங்கியில் மேலாளராக உள்ள கிரிதரன் அங்குள்ள அப்பார்ட்மெண்ட் ஒன்றில் மனைவி பவித்ரா, மற்றும் இரு குழந்தைகளுடன் வசித்து வந்தார். அவரது வீட்டில் எலித்தொல்லை அதிகமாக இருந்ததாக கூறப்படுகின்றது.
வீட்டில் சுற்றித்திரியும் எலிகளை ஒழிக்க ஆன்லைன் மூலம் பெஸ்ட் கண்ட்ரோல் கட்டண சேவை மையத்தை தொடர்பு கொண்டுள்ளார். அங்கிருந்து வந்த இளைஞர் ஒருவர் புதன்கிழமை சமையலறை, படுக்கை அறை உள்பட வீடு முழுதும் கரப்பான் மற்றும் எலி ஒழிப்பு மருந்து தெளித்துள்ளனர். எலிகள் சாப்பிடுவதற்காக இரு இடங்களில் வெள்ளை நிற விஷ மருந்தையும் வைத்து சென்றதாக கூறப்படுகின்றது.
இரவு 8 மணி அளவில் கிரிதரன் குடும்பத்துடன் , குளிர்சாதான வசதி கொண்ட தங்கள் படுக்கை அறையில் உறங்கச்சென்றதாகவும், அதிகாலை 3 மணி அளவில் தூக்கத்தில் இருந்த அவருக்கு மூச்சுவிட சிரமமாக இருந்துள்ளது. எலி மருந்தின் நெடி அளவுக்கதிகமாக படுக்கை அறைக்குள் இருந்ததால் ஏசியை ஆப் செய்துள்ளார். அதன் பின்னரும் 4 பேருக்குமே உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது
காலை 7 மணி அளவில் நண்பரை செல்போனில் அழைத்து அவரது உதவியுடன் இரு குழந்தைகளையும் அருகில் உள்ள தனியார் மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளார். சிறிது நேரத்தில் கிரிதரனுக்கும், அவரது மனைவிக்கும் மூச்சுத்திணறல் ஏற்பட்டதால், இருவரையும் போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். முன் கூட்டியே சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட கிரிதரனின் 6 வயது மகள் விஷாலினியும், ஒரு வயது மகன் சாய் சுதர்சனும் சிகிச்சை பலனின்றி அடுத்தடுத்து உயிர் இழந்ததாக கூறப்படுகின்றது.
தகவல் அறிந்து குன்றத்தூர் காவல் ஆய்வாளர் வேலு சம்பவ இடத்திற்கு சென்று விசாரணையை முன்னேடுத்தார். வீட்டிற்குள் நுழைய இயலாத அளவுக்கு எலி மருந்து நெடி காணப்பட்ட நிலையில் 3 கட்ட முக மூடி அணிந்து வீட்டிற்குள் பார்த்த போது உள்ளே இரு எலிகள் இறந்து கிடந்தது. மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கிரிதரனின் மனைவி பவித்ரா, போலீசாரிடம் வீடு முழுவதும் பெஸ்ட் கண்ட்ரோலில் இருந்து வந்து எலி மருந்து தெளித்த விவரத்தை தெரிவித்தார்.
அதீத விஷத்தன்மை கொண்ட எலி மருந்து நெடியை தீவிரமாக சுவாசித்ததால் இரு குழந்தைகளும் பலியாகி இருப்பதை மருத்துவர்களும் உறுதி செய்த நிலையில் பெஸ்ட் கண்ட்ரோல் ஆன்லைன் குழு அனுப்பி வைத்த இளைஞர் தினகரன் என்பவரை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இதற்கிடையே வீட்டிற்குள் வைக்கப்பட்ட எலி மருந்தை ஆய்வுக்கு எடுத்துச்சென்ற தடயவியல் நிபுணர், அளவுக்கதிகமான விஷமருந்து தெளிக்கப்பட்டதே உயிர் பலிக்கு காரணம் என்று தெரிவித்தனர்...