சென்னையில் பெண்கள் இலவசமாக பயணிக்கும் மாநகர பேருந்தில் இடம் பிடிப்பதில் இரு ஆண்களுக்கு இடையே உண்டான தகராறில் தலையில் காயம் அடைந்த ஒருவர் பேருந்தை விட்டு இறங்க மறுத்து அடம்பிடித்ததால் ஒரு மணி நேரமாக பயணிகள் தவிக்கும் நிலை ஏற்பட்டது
முகத்தில் ரத்தம் வழியும் நிலையிலும், தன்னை தாக்கிய இளைஞரை ஒண்டிக்கு ஒண்டி வர்ரியா என்று வம்பிழுக்கும் காட்சிகள் தான் இவை..!
சென்னை பிராட்வேயில் இருந்து கலைஞர் நகர் செல்லக்கூடிய 17D என்ற மாநகர பேருந்து வள்ளுவர்கோட்டம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது கூட்டநெரிசல் காரணமாக இருக்கையில் அமர்வது தொடர்பாக இரண்டு ஆண் பயணிகள் இடையே பிரச்சனை ஏற்பட்டு இருவரும் மாறிமாறி தாக்கி கொண்டனர்.
இதில் ஒருவருக்கு முகத்தில் காயம் ஏற்பட்டு ரத்தம் வழிந்த நிலையில், அடங்க மறுத்த அவர் மீண்டும் ஆபாசமாக பேசி வம்பிழுத்ததால் இருவருக்கும் மீண்டும் குடுமிப்பிடி சண்டை நடந்தது
காயம்பட்டவர் பேருந்தை விட்டு இறங்க மறுத்து பெண்களிடமும் வாக்குவாதம் செய்தார்
இதையடுத்து பேருந்து ஓட்டுனர் வள்ளுவர் கோட்டம் பகுதியில் பேருந்தை நிறுத்தி வைத்தார், நடத்துனர் காவல்துறையினருக்கு செல்போன் மூலம் புகார் அளித்தார். இதையடுத்து வள்ளுவர் கோட்டத்தில் பேருந்து நிறுத்தப்பட்டிருந்த இடத்திற்கு வந்த நுங்கம்பாக்கம் காவல்துறையினர் தகராறு ஈடுபட்ட இருவரையும் காவல் நிலையம் அழைத்துச்சென்றனர்
காவல்துறை வருகைக்கு பின்னர் பேருந்து புறப்பட்டது. இந்த இட பிரச்சனை ஏற்பட்டதால் ஒரு மணி நேரம் வரை பயணிகள் பேருந்தில் நடுவழியில் தவிக்கும் நிலை ஏற்பட்டது. மகளிர் இலவசமாக பயணம் செய்யும் பேருந்துகள் குறைவாக இயக்கப்படுதன் காரணமாகவே பேருந்தில் கூட்ட நெரிசல் அதிகரித்து இது போன்ற தகராறுகள் ஏற்படுவதாக சக பயணிகள் குற்றம் சாட்டினர்.