செல்ஃபோனில் நீண்ட நேரமாக பப்ஜி கேம் விளையாடியதை தாய் கண்டித்ததால் சென்னையில் கல்லூரி மாணவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டதன் பின்னணி குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.
சென்னை கோடம்பாக்கம் வேங்கீஸ்வரர் நகரைச் சேர்ந்தவர் 22 வயதான பிரவீன். எம்.ஜி.ஆர் பல்கலைக்கழகத்தில் பி.காம் முதலாம் ஆண்டு படித்துக்கொண்டே பகுதி நேரமாக ஸ்விகியில் உணவு டெலிவரி செய்யும் பணியிலும் ஈடுபட்டு வந்துள்ளார் பிரவீன்.
தினமும் தனது நண்பர்களுடன் இணைந்து ஆன்லைன் மூலமாக செல்ஃபோனில் பப்ஜி கேம் விளையாடுவதிலும் ஆர்வம் காட்டி வந்துள்ளார்.
சனியன்று காலையிலேயே பப்ஜி விளையாட்டில் மூழ்கிய பிரவீனை அவரது தாயார் கண்டித்து விட்டு வேலைக்குச் சென்றதாக கூறப்படுகிறது.
பிரவீன் மட்டுமே வீட்டில் இருந்த நிலையில் மதிய நேரத்தில் வந்த அவரது சகோதரர் நீண்ட நேரமாக தட்டியும் கதவு திறக்கப்படாத நிலையில், கதவை உடைத்து உள்ளே சென்ற போது தூக்கிட்ட நிலையில் பிரவீன் சடலமாக கிடந்தது தெரியவந்தது.
தகவலறிந்த வடபழனி போலீஸார், சடலத்தை மீட்டு ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்விற்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர்.
வீட்டில் பிரவீன் எழுதி வைத்திருந்ததாக ஒரு கடிதத்தை கைப்பற்றிய போலீசார், அதில் தான் யாருக்கும் பாரமாக இருக்க விரும்பவில்லை, அனைவரும் என்னை மன்னித்துவிடுங்கள் என உருக்கமாக எழுதப்பட்டு இருந்ததாக தெரிவித்தனர்.
மதுரையைச் சேர்ந்த பிரவீனின் தந்தை ராஜேஷ் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு சாலை விபத்தில் இறந்ததால், குடும்ப வறுமையால் 4 ஆண்டுகளுக்கு முன்பு தான் சென்னையில் குடியேறி உள்ளனர் அவரது குடும்பத்தினர்.
குடும்ப நிலையை கருத்தில் கொண்டே பகுதி நேரமாக பணியாற்றிக் கொண்டே படித்து வந்த பிரவீன், கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு தவணை முறையில் 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான மோட்டார் சைக்கிளை வாங்கி உள்ளார்.
விளையாட்டில் காட்டிய ஆர்வத்தால் ஒழுங்காக வேலைக்குச் செல்லாத பிரவீனால் பிப்ரவரி மாத தவணையை கட்ட முடியாததால், தாயாரிடம் பணம் கேட்டுள்ளார் பிரவீன்.
குடும்ப சூழ்நிலையை தெரிந்து ஒழுங்காக நடந்துக் கொள் என தாய் திட்டியதோடு பணமும் கொடுக்காததால் இந்த முடிவை பிரவீன் எடுத்ததாக தெரிவித்தனர் போலீஸார்.
பலரின் உயிரிழப்புக்கு ஆன்லைன் கேம்கள் காரணமாக இருப்பதாக கூறி நடைபெற்ற பல்வேறு போராட்டங்களுக்கு பிறகு பப்ஜி உள்ளிட்ட கேம்கள் தடை செய்யப்பட்டும், புதிய வெர்ஷனில் பப்ஜி கேம் துவங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.