தாம்பரம் அடுத்த மண்ணிவாக்கத்தில் ரவுடிகளுக்கு மாமூல் கொடுக்க மறுத்ததால் மெடிக்கல் கடை உரிமையாளர் தலை சிதைத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில், கொலையை கண்டித்து போராட்டம் நடத்துவதில் வியாபாரிகள் இரு பிரிவாக செயல்பட்டதால் மோதல் உருவாகும் நிலை ஏற்பட்டது.
மாமூல் கேட்டு ரவுடிகளால் கொலை செய்யப்பட்ட மெடிக்கல் கடை உரிமையாளரின் கொலைக்கு நீதி கேட்டு மறியல் போராட்டம் நடத்த வர மறுத்த வணிகர் சங்க பேரமைப்பு நிர்வாகிகளுடன், தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை அமைப்பினர் வாக்குவாதத்தில் ஈடுபட்ட காட்சிகள் தான் இவை..!
தாம்பரம் அடுத்த மண்ணிவாக்கம் ராசாத்தி கலைஞர் நகர் பகுதியை சேர்ந்தவர் வினோத். இவர் கஸ்தூரி என்ற பெயரில் 10 வருடங்களாக மெடிக்கல் ஷாப் ஒன்றை நடத்தி வந்தார். வெள்ளிக்கிழமை இரவு பத்து முப்பது மணி அளவில் கடையை மூடிவிட்டு அருகே உள்ள பேக்கரிக்கு பொருட்களை வாங்க சென்ற போது இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள், வினோத்தை வழிமறித்து பயங்கர ஆயுதங்களால் தலை முகம் கை கால் என பல்வேறு பகுதிகளில் வெட்டியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
படுகொலை செய்த மர்ம நபர்கள் அங்கே இருந்து கண்ணிமைக்கும் நேரத்தில் தப்பிச்சென்றனர். தகவலறிந்த ஓட்டேரி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று உடல் கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனை அனுப்பி வைத்தனர். கடந்த 3 வருடங்களுக்கு முன்பு ஓட்டேரி பகுதியைச் சேர்ந்த ரவுடி சிலம்பு என்ற சிலம்பரசன் கஸ்தூரி மெடிக்கல் ஷாப்க்கு சென்று வினோத்திடம் ரவுடி மாமூல் கேட்டு மிரட்டினான். வினோத் கொடுத்த புகாரின் பேரில் சிலம்பரசனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
வினோத்திடம் ரவுடி சிலம்புவின் கூட்டாளிகள் புகாரை திரும்ப பெறுமாறு கூறி தொடர்ந்து மிரட்டல் விடுத்து வந்ததாக தகவல் வெளியானது. மாமூல் கொடுக்காத ஆத்திரத்தில் இந்த கொலை நடந்து இருக்கலாம் எனக்கூறி அண்ணாச்சி முத்துக்குமாரின் தமிழ் நாடு வியாபாரிகள் சங்கபேரவை அமைப்பினரும், விக்கிரமராஜாவின் வணிகர் சங்க பேரமைப்பு நிர்வாகிகளும் செங்கல்பட்டு மருத்துவமனை அருகே போராட்டம் நடத்த குவிந்தனர். வியாபாரிகள் சங்க பேரவையினர் சாலைமறியலில் ஈடுபட்ட போது அவர்களுடன் செல்லாமல் விக்ரமராஜா அணியினர் ஓரமாக பேணரை பிடித்துக் கொண்டு நின்றதால் இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
ரவுடிகளுக்கு ஆதரவாக போலீசார் செயல்படுவதாகவும், போலீசாருக்கு ஆதரவாக விக்கிரமராஜா செயல்படுவதாகவும் கூறி மறியலில் ஈடுபட்டவர்கள் எதிர் கோஷம் எழுப்பினர். இதையடுத்து போலீசார் அவர்களை குண்டு கட்டாக தூக்கிச்சென்று கைது செய்து வேணில் ஏற்றினர். வேணில் ஏற்றப்பட்ட பின்னரும் எதிர்தரப்பு வியாபாரிகளை திட்டியபடியே சென்றனர்.
அதன் பின்னர் விக்கிரமராஜா தரப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்திய கையோடு, கொலையாளிகளை கைது செய்யும் வரை சடலத்தை வாங்க மாட்டோம் என்ற உறவினர்களை சமாதானப்படுத்தி , பிணக்கூறாய்வுக்கு பின்னர் சடலத்தை பெற்று சொந்த ஊரான நெல்லை மாவட்டத்துக்கு எடுத்துச்செல்ல ஏற்பாடு செய்தனர். கொலை சம்பவத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.