செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே போலீஸ் பிடியிலிருந்து தப்பிச்செல்ல முயன்ற பிரபல ரவுடியை போலீசார் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனர்.
திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையத்தைச் சேர்ந்த தணிகா என்கிற தணிகாசலம் என்பவர் மீது திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம்ஆகிய 3 மாவட்ட காவல் நிலையங்களில் கொலை,கொலைமுயற்சி, வழிப்பறி, திருட்டு என 30-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதனால் இவர் A+ ரவுடி பிரிவில் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. காஞ்சிபுரத்தில் மறைந்த தாதா ஸ்ரீதரின் வலதுகரமாக இருந்து செயல்பட்டு வந்ததும் விசாரணையில் தெரிய வந்தது.
சித்தாமூர் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வழிப்பறி வழக்கில் தணிகா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக கடந்த சில தினங்களாக நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்து வந்ததால், தணிகாவிற்கு பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனைத் தொடர்ந்து செங்கல்பட்டு தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி சென்னையில் பதுங்கி இருந்த தணிகாவை நேற்றிரவு கைது செய்து சித்தாமூர் காவல்நிலையம் அழைத்து சென்றுள்ளனர். மதுராந்தகம் அடுத்த மாமண்டூர் பகுதியில் சென்ற போது தணிகா போலீசார் பிடியில் தப்பிப்பதற்காக காவலர்களை தாக்கியதாக கூறப்படுகிறது.
தணிகாவின் நோக்கத்தை அறிந்து கொண்ட போலீசார் அதனை தடுத்து நிறுத்தும் முயற்சியில் ஈடுப்பட்டனர். அவர்களையும் மீறி ஒரு கட்டத்தில் காரில் இருந்து தப்பியோட முயற்சி செய்த போது, போலீசார் துப்பாக்கியால் சுட்டதில் தணிகாவின் வலதுகை, வலதுகால் ஆகிய பகுதிகளில் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்தன.
இதில் காயம் அடைந்த அவரை மீட்ட போலீசார் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக தணிகாவை சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து தணிகா மீது கொலை முயற்சி, கொலை மிரட்டல், அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்தது, ஆபாச வார்த்தையால் திட்டியது என மொத்தம் நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.