சென்னை சைதாப்பேட்டையில் பெட்ரோல் பங்க் மேற்கூரை சாய்ந்து விழுந்ததில் பங்க் ஊழியர் பலியானார். மழைக்கு ஒதுங்கிய இருசக்கர வாகன ஓட்டிகள் உள்ளிட்ட 8 பேர் படுகாயம் அடைந்த சம்பவம் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தித்தொகுப்பு..
சென்னை சைதாப்பேட்டை கிழக்கு ஜோன்ஸ் சாலையில் அஸ்வினி ஆயில் ஏஜென்சி என்ற பெயரில் பெட்ரோல் பங்க் இயங்கி வருகிறது.
வெள்ளிக்கிழமை இரவு 7 மணியளவில் கனமழை காரணமாக வாகன ஓட்டிகள் சிலர் இந்த பெட்ரோல் பங்கின் கூரைக்குக் கீழ் தஞ்சமடைந்தனர். அப்போது பலத்த காற்றுடன் பெய்த கனமழை காரணமாக பெட்ரோல் பங்கில் கூரை அடியோடு அப்படியே உடைந்து சாய்ந்தது.
இதில் ஊழியர்கள், பெட்ரோல் போட வந்தவர்கள், மழைக்காக ஒதுங்கியவர்கள் என 30-க்கும் மேற்பட்டவர்கள் உள்ளே சிக்கிக் கொண்டனர்.
தீயணைப்புத்துறையினர் கிரேன் உதவியுடன் கூரையைத் தூக்கி உள்ளே சிக்கியவர்களை மீட்டனர். இந்த விபத்தில் பங்க் ஊழியர் கந்தசாமி என்பவர் சிகிச்சை பலனின்றி பலியானார். பலத்த காயமடைந்த 8 பேருக்கு ராயப்பேட்டை மற்றும் கிண்டி அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சம்பவ இடத்தை பார்வையிட்ட அமைச்சர் மா.சுப்பிரமணியன், 17 ஆண்டுகள் பழமையான மேற்கூரை இரு தூண்களில் மட்டும் நின்றதாகவும், அவை பலமிழந்து கீழே சாய்ந்ததால் இந்த விபத்து நடந்ததாகவும் தெரிவித்தார்
பெட்ரோல் பங்க் என்பதால் கூரைக்கு அடியில் சிக்கியவர்களை மீட்க வெல்டிங் சாதனங்களைப் பயன்படுத்தாமல், கிரேனைப் பயன்படுத்தி தூக்கியதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
இதற்கிடையே, கவனக்குறைவால் விபத்து மற்றும் உயிரிழப்பு நேர காரணமானதாக வழக்குப்பதிவு செய்து உரிமையாளர் அசோக் மற்றும் மேலாளர் வினோத் ஆகிய இருவரிடமும் சைதாப்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் . சென்னையில் உள்ள அனைத்து பெட்ரோல் பங்க் கூரைகளின் ஸ்திரத்தன்மை குறித்தும் ஆய்வு மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.