சென்னை அடையாறு ஆற்றின் முகத்துவாரத்தை தூர்வாரி அகலப்படுத்தும் பணியை மேற்கொள்ள கடலோர ஒழுங்குமுறை மண்டல ஆணையம் அனுமதி அளித்துள்ளது.
அடையாறு ஆறு சீரமைப்பு திட்டத்தை சென்னை நதிகள் சீரமைப்பு கழகம் செயல்படுத்தி வருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் 13 பணிகளை மேற்கொள்ள கடந்த 2019 ஆம் ஆண்டு கடலோர ஒழுங்குமுறை மண்டல ஆணையம் அனுமதி அளித்தது. ஆனால், முறையான ஆய்வு மேற்கொள்ளப்படவில்லை என அடையாறு ஆற்றின் முகத்துவாரத்தை தூர்வாரும் பணிக்கு மட்டும் அனுமதி அளிக்கவில்லை.
இதனைத் அடுத்து தமிழ்நாடு அரசின் நீர்வளத்துறை கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தேசிய கடல் தொழில்நுட்ப நிறுவனத்துடன் இணைந்து முறையான ஆய்வை மேற்கொண்டது. அதனடிப்படையில் தூர்வாரும் பணிக்கு விண்ணப்பிக்கப்பட்ட நிலையில், அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.