நள்ளிரவில் மதுபோதையில் காரை ஓட்டி வந்து வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போலீஸாரின் ரோந்து வாகனத்தின் மீது மோதிய இளைஞர், போலீஸார் தனது மூக்கை உடைத்து விட்டதாகக் கூறி ரகளையில் ஈடுபட்டார்.
சென்னை வள்ளுவர் கோட்டம் ஹைரோட்டில், தடுப்புகளை அமைத்து வழக்கமான வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர் காவல்துறையினர்.
நள்ளிரவு நேரத்தில் வேகமாக வந்த மாருதி சுசூகி காரை நிறுத்துவதற்கு சைகை செய்தனர் போலீஸார். ஆனால், அந்த கார் நிற்காததோடு, பேரிகார்டுகளின் மீது மோதி, அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த போலீஸின் ரோந்து வாகனத்தின் பின்பகுதியில் மோதியது.
உடனடியாக, காருக்குள் இருந்த இளைஞரை மீட்டதாகவும் அப்போது அவர் மூக்கிலிருந்து ரத்தம் வழிந்ததாகவும் தெரிவித்தனர் போலீஸார். மேலும், அவர் மதுபோதையில் இருந்தது தெரிய வந்ததால், ப்ரீத் அனலைசர் கருவியில் ஊதச் சொன்னார்கள் போலீஸார்.
முதலில் தன்னை விட்டுவிடுமாறு கெஞ்சிய அந்த இளைஞரோ பிறகு தன்னை போலீஸார் தாக்கி விட்டதாக குற்றஞ்சாட்டினார். தான் மதுபோதையில் வந்தாலும் எப்படி எனது மூக்கில் பஞ்ச் பன்னலாம் என கேட்டு ரகளையை தொடங்கினார் அந்த இளைஞர்.
வேகமாக வந்து போலீஸின் ரோந்து வாகனத்தில் இடித்ததில் இரண்டு கார்களும் சேதமடைந்து விட்டதாகவும், கார் ஸ்டியரிங்கில் பட்டு மூக்கு உடைந்து ரத்தம் வந்ததாகவும் அந்த இளைஞரிடம் போலீஸார் விளக்கமளித்தனர்.
ஆனால், அதனை ஏற்க மறுத்த அந்த இளைஞரோ, டிடியில் இருந்தால் 10 ஆயிரம் ரூபாய் தானே ஃபைன் போடூவீர்கள், போட்டுக்கங்க ஆனா என் மூக்கை ஏன் உடைத்தீர்கள் என திரும்ப திரும்ப கேட்டுக் கொண்டே இருந்தார்.
ஒருவழியாக ப்ரீத் அனலைசர் கருவியில் அவரை ஊத வைத்ததில் அவர் மது போதையில் இருந்தது உறுதியானது.
இதனையடுத்து, ராயபேட்டையைச் சேர்ந்த ரியாஸ் அகமது என்ற அந்த இளைஞருக்கு போதையில் வாகனத்தை இயக்கியதற்காக 10 ஆயிரம் ரூபாயும், விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்காததற்கு 1,500 ரூபாயும் மற்றும் உரிய ஆவணங்களை காட்டாததற்கு 500 ரூபாயும் அபராதமாக விதிக்கப்பட்டதாக தெரிவித்தனர் போலீஸார்.
குடிபோதையில் விபத்தை ஏற்படுத்தியதாக ரியாஸ் அகமது மீது பாண்டிபஜார் போக்குவரத்து காவல் நிலையத்திலும் வழக்கு பதிவு செய்யப்பட்டது.