ஆவடி மாநகர காவல் எல்லைக்குட்பட்ட மணலி எக்ஸ்பிரஸ் சாலையில் கண்டெய்னர் லாரிகளை மறித்து கூலிக்கு ஆட்களை வைத்து போக்குவரத்து போலீசார் மாமூல் வசூலித்து வருவதாக லாரி ஓட்டுனர்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர். செய்தியாளரை கண்டதும் வசூல் ஆசாமிகள் தெறித்து ஓடிய சம்பவம் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தித்தொகுப்பு...
கடந்த ஒரு வருடத்துக்கும் மேலாக, மணலி விரைவுச் சாலையில் இல்லாமல் இருந்த கெடுபிடி வசூல் கடந்த 4 தினங்களாக மீண்டும் தலைதூக்க தொடங்கி இருக்கின்றது.
சென்னை துறைமுகத்துக்கு செல்லும் கண்டெய்னர் லாரிகளை மறித்து மாமூல் வாங்கிய போது கையும் களவுமாக காமிராவில் சிக்கியதால் பின்னங்கால் பிடறியில் அடிக்க ஓடும் பின்-லேடன் இவர் தான்..!
ஆந்திரா மற்றும் தென் மாவட்டங்களில் இருந்து சென்னை துறைமுகத்துக்கு சரக்கு ஏற்றி வரும் கண்டெய்னர் லாரிகளை, மணலி எக்ஸ்பிரஸ் சாலையில் தடுத்து நிறுத்தும் போக்குவரத்து போலீசார், துறைமுகத்துக்குள் லாரிகள் செல்லவில்லை என்று கூறி சாலையில் வலுக்கட்டாயமாக தடுத்து நிறுத்தி வைப்பதாக கூறப்படுகின்றது.
ஆனால் உண்மையில் பீச் ரோட்டில் துறைமுகம் செல்லும் சாலையோ, போக்குவரத்து இன்றி காற்று வாங்குகின்றது
குறிப்பாக எம்.எப்.எல், சந்திப்பு, சாத்தங்காடு, முல்லை நகர், பார்ம் 13 ஆகிய 4 இடங்களில் போக்குவரத்து போலீசார் லாரிகளை மறித்து போட்டு கூலிக்கு ஆட்களை வைத்து பாயிண்டுக்கு 100 ரூபாய் என கட்டாயமாக வசூலித்து வருவதாகவும், அப்படி பணம் கொடுக்காததால், லாரிகளுடன் நாட்கணக்கில் சாலையில் பசி மயக்கத்தில் காத்து கிடப்பதாகவும் ஓட்டுனர்கள் குற்றச்சாட்டை தெரிவித்தனர்
தங்களுக்கு சாப்பிட வழியில்லை என்று கூறினாலும், 100 ரூபாய் கொடுத்தால் தான் போகலாம் என்று போலீசார் கறாராக காத்திருக்க வைப்பதாகவும், மொத்தமாக 300 ரூபாய் கொடுத்தால் போதும் அரைமணி நேரத்தில் துறைமுகத்துக்கு சென்று விடலாம் என்ற நிலையில் பல மணி நேரம் காத்துக்கிடப்பதாக சில ஓட்டுனர்கள் ஆதங்கம் தெரிவித்தனர்.
பார்ம் 13 பாயிண்டில் மாமூல் வாங்கும் ஆசாமியை படம் பிடித்ததும், அவர் நமது செய்தியாளரை படம் பிடிக்கவிடாமல் தடுத்து அருகில் நின்ற போலீஸ்காரருக்கு செல்போன் மூலம் தகவல் கொடுத்தார்
கூலிங்கிளாஸ், முக கவசம் சகிதம், அங்கு வந்த போக்குவரத்து போலீஸ்காரர் மாமூல் ஆசாமியை அங்கிருந்து போகச்செய்தார்.
சாத்தாங்காடு பாயிண்டில் லுங்கி அணிந்த வசூல் சக்கரவர்த்தி லாரி ஓட்டுனர்களிடம் பணம் வாங்கிக் கொண்டிருந்தார்.
கேமராவை பார்த்ததும் மெல்ல நகர்ந்து.... நடக்க ஆரம்பித்தவர்.. விட்டால் போதும் என்று தலை தெறிக்க ஓட்டம் பிடித்தார் ...
இதனை கண்டுகொள்ளாமல் காபி சாப்பிட்டுக் கொண்டிருந்த போக்குவரத்து காவலர் நமது செய்தியாளரை தடுத்தார். சாலையில் லாரிகளை தடுத்து நிறுத்திபோட்டு பணம் கொடுப்பவர்களை மட்டும் அனுமதிப்பதால், குறித்த நேரத்தில் தங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்ல இயலாமல் கடுமையாக பாதிப்புக்குள்ளாகி இருப்பதாக கார், பைக், ஆட்டோ உள்ளிட்ட மற்ற வாகன ஓட்டிகள் வேதனை தெரிவித்துள்ளனர். இது குறித்து விளக்கம் அளித்துள்ள போக்குவரத்து உதவி ஆணையர் மலைச்சாமி சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதி அளித்தார்.