சென்னையில் மெட்ரோ பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்த கிரேனை திருடி 278 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஓட்டிச் சென்று ஆந்திராவில் மாத வாடகைக்கு விட்ட மெட்ரோ பணியாளர்கள் உள்ளிட்ட 5 பேரை போலீஸார் கைது செய்தனர்.
சென்னையில் நடைபெற்று வரும் மெட்ரோ ரயில் பணிக்காக தனது 40 லட்சம் ரூபாய் மதிப்பிலான கிரேனை வாடகைக்கு விட்டிருந்தார் பொன்னேரியைச் சேர்ந்த கிருஷ்ணகுமார். மேடவாக்கம் பகுதியில் பணியில் ஈடுபடுத்தப்பட்ட கிரேன் கடந்த 11 ஆம் தேதி காணாமல் போனதாக கிருஷ்ணகுமாருக்கு தகவல் அளிக்கப்பட்டது.
பள்ளிக்கரணை காவல் நிலையத்தில் கிருஷ்ணகுமார் புகார் அளித்ததைத் தொடர்ந்து, ஆய்வாளர் புஷ்பம் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
கிரேன் நிறுத்தப்பட்டிருந்த பகுதிகளிலிருந்த சி.சி.டிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்த போது, இருசக்கர வாகனத்தில் வந்த 4 பேர் கிரேனை திருடிச் செல்வது தெரிய வந்தது. கிரேன் செல்லும் பகுதிகளில் உள்ள அடுத்தடுத்த 250 சி.சி.டிவி பதிவுகளை ஆய்வு செய்துக் கொண்டே தனிப்படையினர் பின்தொடர்ந்தனர்.
மேடவாக்கத்தில் துவங்கிய ஆய்வு ஆந்திரா மாநிலம் கடப்பாவை தாண்டி 278 கிலோ மீட்டர் தூரம் வரையில் தொடர்ந்தது. அங்கு, கிரேனை வைத்திருந்த, கனரக வாகனங்களை வாடகைக்கு விடும் தொழிலில் ஈடுபட்டு வரும் நரசிம்ம ரெட்டியை தனிப்படையினர் கைது செய்து சென்னைக்கு அழைத்து வந்தனர்.
மாத வாடகைக்கு கிரேன் தேவைப்பட்டதால் தன்னிடம் ஏற்கனவே வேலைப்பார்த்து வந்த சென்னை பட்டாபிராமைச் சேர்ந்த கார்த்திக்கை தொடர்பு கொண்டதாகவும் அவரே தனக்கு கிரேன் வழங்கியதாகவும் தெரிவித்தார் நரசிம்மாரெட்டி.
இதனையடுத்து கார்த்திக்கை பிடித்து விசாரித்த போது, கிரேன் வழங்கினால் முன்பணமாக 10 லட்சம் ரூபாய் வரையில் கிடைக்கும் என்பதால் மெட்ரோ பணிகளில் ஈடுபட்டு வரும் தனது நண்பர்களான முரளி, சர்மா ஆகியோரை தொடர்புக் கொண்டுள்ளார் கார்த்திக்.
அவர்கள், மேடவாக்கத்தில் இருக்கும் கிரேனை திருடிச் சென்று வழங்கி விடலாம் என ஐடியா கொடுக்க, அதன்படியே கிரேனை திருடிச் சென்று நரசிம்மா ரெட்டியிடம் ஒப்படைத்துள்ளனர். 5 லட்சம் ரூபாயை ரொக்கமாகவும், மூன்று மாத வாடகைக்கான முன்பணமாக 5 லட்சம் ரூபாய்க்கு காசோலையையும் பெற்றுள்ளனர்.
கிரேனை கடத்திச் சென்றதாக கார்த்திக், முரளி, சர்மா மற்றும் திருநாவுக்கரசை போலீஸார் கைது செய்தனர். விரைவாக விசாரணை நடத்திய தனிப்படையினரை பள்ளிக்கரணை துணை ஆணையர் ஜோஷ் தங்கையா சால்வை அணிவித்து பாராட்டினார்.