சென்னை வளசரவாக்கத்தில் இரண்டரை ஆண்டுகள் கழித்து வாழைமரம் ஒன்று குலை தள்ளிய நிலையில், அதன் வாழைப்பழங்களில் துவர்ப்புச் சுவையுடன் மிளகு அளவிலான ஏராளமான விதைகள் இருந்தது வியப்பை ஏற்படுத்தி உள்ளது.
வாழைப்பழத்தில் இருந்த மிளகு அளவிலான விதைகளைக் கண்டு மிரண்டு போன சுப்பு என்கிற சுப்பிரமணி இவர் தான்..!
வளசரவாக்கம், சக்கரபாணி தெருவில் உள்ள வீட்டில் வாடகைக்கு வசித்து வரும் சுப்பிரமணி என்பவர் இரு வாழைமரங்களை வளர்த்து வந்தார். 24 அடி உயரம் வளர்ந்தாலும், கடந்த இரண்டரை வருடங்களாக குலை தள்ளாமல் இருந்த அந்த வாழை மரங்களில் ஒன்றில் சில வாரங்களுக்கு முன்பு குலைதள்ளியது அண்மையில் அந்த மரத்தை வெட்டி அந்த வாழைக்குலையை கீழே இறக்கினார் சுப்பு , அந்த வாழைப்பழங்களில் தான் மிளகு அளவில் விதைகள் காணப்பட்டன.
அந்த வாழைப்பழங்களில் உள்ள விதைகள் துவர்ப்பாக இருந்ததால் அதனை முழுமையாக உண்ண முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் அந்த பழங்களில் உள்ள விதையை எடுத்து காயப்போடும் நிலைக்கு தள்ளப்பட்டார்.
மிளகு போன்ற விதைகள் கொண்ட வாழைப்பழங்களுடன் வேளாண் ஆராய்ச்சி மைய அதிகாரிகளை சந்தித்த சுப்பு, வாழைப்பழம் இப்படி இருப்பதற்கு என்ன காரணம் என்று கேட்டுள்ளார். அதற்கு அதிகாரிகள் வாழைப்பழங்களை தாங்கள் ஆய்வு செய்து பதில் தருவதாக கூறி உள்ளனர். இதற்கிடையே வயதான வாழைமரங்கள் குலைதள்ளினால் அவற்றில் விதைகள் பெரிதாகத் தோன்றும் என்று சிலர் கூறி வருகின்றனர். இதற்கிடையே அவர் வெட்டிவிட்ட வாழைமரத்தின் அடியில் 20 கிளைக் கன்றுகள் புதிதாக முளைத்துள்ளன.
விதையில்லாப் பழங்களை தேடி உண்ணும் தலைமுறை வாழும் இந்த காலத்தில், பருத்த விதைகளுடன் விளைந்துள்ள வாழைப்பழம் அதிசயமே..!