சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் இருந்து திருமாவளவன் தொடர்புடைய குற்ற வழக்கு ஆவணங்கள் மாயமான சம்பவத்தை தொடர்ந்து அவர் மீது மீண்டும் புதிதாக கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை நந்தம்பாக்கத்தைச் சேர்ந்த வேதா அருண் நாகராஜன் என்பவர் நந்தம்பாக்கம் காவல் நிலையத்தில் கடந்த 2011 ஆம் ஆண்டு புகார் ஒன்றை அளித்தார். அதில் விடுதலைச் சிறுத்தை கட்சி அலுவலகத்திற்கு சென்ற பொழுது அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தூண்டுதலின் பெயரில் வீரப்பன் என்பவரும் அவரது ஆதரவாளர்களும் சேர்ந்து தன்னை தாக்கியதாக கூறி இருந்தார்
சம்பவம் நடந்தது வேளச்சேரி என்பதால் இது தொடர்பாக நந்தம்பாக்கம் காவல் நிலையத்தில் கொடுக்கப்பட்ட புகார் பின்பு வேளச்சேரி காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டது. இந்த புகார் தொடர்பாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், வீரப்பன் உள்ளிட்டோருக்கு எதிராக கொலை முயற்சி, ஆபாசமாக பேசுதல், அடித்துக் கொடுங்காயத்தை ஏற்படுத்துதல் உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் மேல் நடவடிக்கை ஏதும் எடுக்க்ப்படாமல் கிடப்பில் போடப்பட்டதால், புகார்தாரர் வேதா அருண் நாகராஜன் உயர் நீதிமன்றத்தை நாடினார். விசாரண நடத்திய உயர்நீதிமன்றம் 10 ஆண்டுகளாக வழக்கில் முன்னேற்றம் இல்லாததை சுட்டிக்காட்டி சைதாப்பேட்டை நீதிமன்றம் மீண்டும் இது குறித்து விசாரிக்க உத்தரவிட்டது. நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பான ஆவணங்களோ மற்ற விவரங்களோ எதுவும் இல்லை என்றும் காவல் நிலையத்திலும் இது தொடர்பான ஆவணங்கள் மாயமாகி இருப்பது தெரியவந்தது.
அதனால் சைதாப்பேட்டை 18- வது நீதிமன்ற நீதிபதி , அதே புகாரில் மீண்டும் வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டார். அதன்படி வேளச்சேரி காவல் நிலையத்தில் கொலை முயற்சி, ஆபாசமாக பேசுதல், கொலை மிரட்டல் விடுத்தல், கொடுங்காயம் ஏற்படுத்துதல் உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ் வி.சி.க தலைவர் தொல். திருமாவளவன் , வீரப்பன் உள்ளிட்ட ஒன்பது நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். 12 ஆண்டுகளுக்கு பின்னர் இந்த சம்பவம் குறித்து வேளச்சேரி போலீசார் தற்போது மீண்டும் விசாரணையை துரிதப்படுத்தி உள்ளனர்.