நந்திகேஷ்வரர் , மகாலட்சுமி உருவங்கள் பொறிக்கப்பட்டு 2 கிலோ வரை எடை கொண்ட 5 அடி உயர தங்கமுலாம் பூசப்பட்ட செங்கோலை 1947ம் ஆண்டு 15 ஆயிரம் ரூபாய்க்கு தயாரித்து, திருவாவடுதுறை ஆதீனத்திடம் அளித்ததாக தமிழகத்தை சேர்ந்த உம்மிடி பங்காரு செட்டி நிறுவனம் தெரிவித்துள்ளது.
1947ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஆங்கிலேயரிடம் இருந்து இந்தியா சுதந்திரம் பெற்றபோது, அதற்கு அடையாளமாக கவர்னர் ஜெனரல் மவுண்ட் பேட்டனால், நாட்டின் முதல் பிரதமராக பதவியேற்ற நேருவிடம் செங்கோல் அளிக்கப்பட்டது. அலகாபாத் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருந்த அந்த செங்கோல், புதிய நாடாளுமன்றத்தில் மக்களவைத் தலைவர் இருக்கை அருகே தற்போது வைக்கப்படவுள்ளது. இதுகுறித்து சென்னையில் உம்மிடி பங்காரு செட்டி நிறுவன உரிமையாளர்கள் உம்மிடி சுதாகர் மற்றும் உம்மிடி பாலாஜி செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது அவர்கள், செங்கோலை 10 முதல் 12 பேர் வரை கைகளால் ஒரு மாதம் செய்ததாகவும், அதை செய்யும்போது உடனிருந்த தனது பெரியப்பா உள்பட உம்மிடி பங்காரு செட்டி குடும்பத்தினர் 15 பேர் புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவில் பங்கேற்க உள்ளதாக தெரிவித்தனர்.