சென்னை மயிலாப்பூரில் காலை 8 மணிக்கே கள்ளத்தனமாக மது வாங்கி அருந்திய நபர் , பேருந்துக்காக காத்திருந்தவருடன் வாக்குவாதம் செய்து நெற்றியில் தாக்கி ரத்தக் காயத்தை ஏற்படுத்தினார்.
ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள 'நியூ உட்லாண்ட்ஸ் ' பேருந்து நிறுத்தத்தில் காலை 8. 30 மணிக்கு பெண் பயணிகள் உட்பட ஏராளமானோர் பேருந்துக்காக காத்திருந்தனர். அப்போது அங்குவந்த போதை ஆசாமி ஒருவர், பேருத்துக்காக காத்திருந்த ஏழுமலை என்பவரிடம் பேருந்து நிறுத்தத்திற்கு வழி கேட்டுள்ளார்.
ஆனால் போதையில் இருந்த நபருக்கு ஏழுமலை வழி சொல்ல மறுத்ததால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. கோபமடைந்த போதை ஆசாமி, ஏழுமலையின் முகத்தில் ஓங்கி குத்தியதில் நெற்றியில் காயம் ஏற்பட்டு அவரது சட்டை ரத்தக் கறையானது.
அவ்வழியே இருசக்கர வாகனத்தில் சென்ற அமைந்தகரை காவல் நிலைய உதவி ஆய்வாளர் ஜெயராமன் பேருந்து நிறுத்தத்தில் இருந்தவர்களிடம் நடந்த விஷயங்களை கேட்டறிந்தார். அப்போது அந்த போதை ஆசாமி அருகிலிருக்கும் மதுக்கடையில் 8 மணிக்கே வாங்கி மதுவாங்கி அருந்தியதாகவும், வழி கேட்ட போது தவறாக பேசியதால் ஏழுமலையை தாக்கியதாகவும் கூறினார்.
மேலும் நடைமேடையில் அமர்ந்து கொண்டு உதவி ஆய்வாளரின் கால்களை தொட்டுத் தொட்டு வணங்கி தன் மீது எந்த தவறும் இல்லை என போதை ஆசாமி கெஞ்சினார். அங்கிருந்தவர்கள், காயமடைந்த ஏழுமலையை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.