சென்னையில் தொடர்ந்து இருசக்கர வாகனங்கள் மற்றும் அதன் பேட்டரிகளை திருடி, போலீசாரிடம் சிக்காமல் தப்பிவந்த திருடன், விலை உயர்ந்த நாயை திருடி, காதலிக்கு பரிசளிக்க முயன்றபோது சிக்கிக்கொண்டான்.
சென்னை விருகம்பாக்கம் நடேசன் நகரை சேர்ந்த ரமேஷ்குமார் என்பவரின் யமஹா ஆர்.எக்ஸ் 100 ரக இருசக்கர வாகனம், கடந்த ஒன்றாம் தேதி வீட்டிற்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்தபோது, திருடு போனது.
அவர், விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில், சி.சி.டி.வி. பதிவுகளை வைத்து, போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
இதேபோல், சாலிகிராமத்தைச் சேர்ந்த வெங்கடேஷ் என்பவரின் விலை உயர்ந்த பல்சர் வாகனம் திருடப்பட்ட சம்பவத்திலும், அதே நபர் கைவரிசை காட்டியது கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும்,அந்நபர் இருசக்கர வாகன பேட்டரிகளையும் திருடி எடுத்துச்செல்வது கண்டுபிடிக்கப்பட்டு,அவனது அடையாளங்களை வைத்து போலீசார் தேடி வந்தனர்.
இந்நிலையில், சாலிகிராமத்தைச் சேர்ந்த தில்லைக்கரசி என்பவர் வீட்டில், அவரது செல்ல பிராணி நாய் ஒன்று காணாமல் போனது. பீகிள் எனும் ரகத்தைச் சார்ந்த அந்த வெளிநாட்டு நாயின் விலை 30 ஆயிரம் ரூபாய் எனக் கூறப்படும் நிலையில், இது குறித்து விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
தொடர்ந்து விசாரணை நடத்திய போலீசார், நாயை திருடிய அதே நபர்தான், இருசக்கர வாகன திருட்டு வழக்கில் தேடப்பட்டு வருபவர் என்பதை உறுதிப்படுத்தினர்.
சி.சி.டி.வி. காட்சிகளின் அடிப்படையில் தேடி வந்த போலீசார், சாலிகிராமம் தசரதபுரம் பகுதியைச் சேர்ந்த 22 வயதான சுஜித் என்பவன்தான், திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததை கண்டுபிடித்து கைது செய்தனர்.
அவனது வீட்டில் மறைத்து வைத்திருந்த வெளிநாட்டு ரக நாயையும் பறிமுதல் செய்த போலீசார், திருடி விற்பதற்காக பதுக்கி வைத்திருந்த இருசக்கர வாகனங்களையும் மீட்டனர்.
கைது செய்யப்பட்ட சுஜித், வாகனங்கள் மற்றும் வாகன பேட்டரிகளை திருடி விற்று, கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருளை வாங்கி பயன்படுத்தும் பழக்கம் உடையவன் என்பது தெரியவந்துள்ளது.
தனது காதலிக்கு நாய்கள் என்றால் மிகவும் பிடிக்கும் என்பதால், விலை உயர்ந்த வெளிநாட்டு நாயை திருடிவந்து பழகி, சில நாட்களில் காதலிக்கு பரிசளிக்க திட்டமிட்டிருந்த நிலையில், தான் சிக்கிக்கொண்டதாகவும் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளான்.