சென்னையில் காரில் சென்றவருக்கு, தலைக்கவசம் அணியவில்லை என்று கூறி ஒரே நாளில் 54 முறை அபராதம் விதிக்கப்பட்ட கூத்து தானியங்கி கேமராவால் அரங்கேறி உள்ளது. காரின் உரிமையாளரை காவல் ஆணையாளர் அலுவலகத்துக்கே வரவழைத்த பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு.
சென்னையில் விதிமீறலில் ஈடுபடும் வாகன ஓட்டிகளை போக்குவரத்து போலீசார் மடக்கி வாகன தணிக்கை செய்து அபராதம் விதிப்பது போல, ANPR கேமரா எனும் நவீன தொழில்நுட்பத்துடன் இணைக்கப்பட்ட தானியங்கி கேமரா மூலமும் விதிமீறல்களை கண்டுபிடித்து வழக்கு பதிந்து அபராதம் விதிக்கும் முறை நடைமுறையில் உள்ளது.
அந்த தானியங்கி கேமரா பொருத்தப்பட்ட இடங்களில் விதிமீறல்களில் ஈடுபடும் வாகனங்களின் பதிவெண்ணை படம் பிடித்து அபராத ரசீதை வாகன உரிமையாளரின் செல்போன் எண்ணிற்கு அனுப்பும் பணியை இந்த கேமராவுடன் இணைக்கப்பட்ட மென்பொருள் மேற்கொள்ளும்.
அந்த வகையில் அடையாறைச் சேர்ந்த சஞ்சய்குமார் என்பவருக்கு கடந்த செப்டம்பர் மாதம் 19-ந் தேதி சென்னை போக்குவரத்து காவல் துறை அனுப்பிய அபராத ரசீதில் அவரது காரின் பதிவெண்ணை குறிப்பிட்டு, பின் இருக்கையில் அமர்ந்துச் செல்லும் போது தலைகவசம் அணியவில்லை என 100 ரூபாய் அபராதம் விதித்துள்ளனர்.
இதே விதிமீறலை குறிப்பிட்டு அடுத்தடுத்து ஒரே நாளில் மொத்தமாக 54 முறை ஐயாயிரத்து 400 ரூபாய் அபராதம் விதித்து ரசீது குறுந்தகவலாக அனுப்பப்பட்டதால் சஞ்சய்குமார் அதிர்ச்சியடைந்தார். நல்ல வேளையாக அப்போது புதிய மோட்டார் வாகன சட்டம் அமலுக்கு வரவில்லை என்பதால் 5400 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது இல்லையென்றால் 54 ஆயிரம் விதித்திருப்பார்கள் என்று கூறப்படுகின்றது
இது குறித்து சென்னை போக்குவரத்து காவல் துறையை தொடர்பு கொண்டு சஞ்சய்குமார் புகார் தெரிவித்தார். அதற்கு கேமராவுடன் இணைக்கப்பட்ட மென்பொருளில் தொழில் நுட்ப கோளாறு என விளக்கம் கூறியதோடு, காவல் ஆணையர் அலுவலகத்திற்கு நேரில் வந்து வேண்டுகோள் மனு எழுதி கொடுத்தால் அந்த அபராதத்தை ரத்து செய்வதாக கூறியுள்ளனர்.
காரின் பதிவெண்ணிற்கு தலைகவசம் அணியவில்லை என 54 முறை தவறுதலாக வழக்கு பதிந்துவிட்டு, அதை சரி செய்ய பாதிக்கப்பட்டவரையே நேரில் காவல் ஆணையர் அலுவலகத்துக்கு வரவைத்து, அவர் தவறு செய்தது போல கோரிக்கை மனு கொடுக்க வைத்து அலைகழிப்பதாக சஞ்சய்குமார் குற்றம்சாட்டியுள்ளார்