சென்னையில், பெண்களை குறிவைத்து ஏடிஎம் மையங்களில் நூதன திருட்டில் ஈடுபட்டு வந்ததாக மத்திய அரசு ஊழியரை போலீசார் கைது செய்துள்ளனர். மகளின் திருமணத்துக்கு வாங்கிய 15 லட்சம் ரூபாய் கடனுக்கான வட்டியை செலுத்த குறுக்கு வழியில் சென்று தற்போது கம்பி எண்ணிக் கொண்டிருப்பது குறித்து விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு.
சென்னை எம்கேபி நகரைச் சேர்ந்த தனியார் நிறுவன ஊழியரான ஜாக்லின், வியாசர்பாடியிலுள்ள ஏடிஎம் மையத்துக்கு டெபிட் கார்டை ஆக்டிவேட் செய்து, முதல் மாத சம்பளத்தை எடுக்க சென்றுள்ளார். அப்போது பின்னால் அப்பாவி போல நின்றிருந்த நபரிடம் ஜாக்லின், டெபிட் கார்டை ஆக்டிவேட் செய்ய உதவி கேட்டுள்ளார்.
அந்த நபர், ஜாக்லினுக்கு தெரியாமல் டெபிட் கார்டை ஆக்டிவேட் செய்து, அதை நைசாக தனது பேண்ட் பாக்கெட்டுக்குள் போட்டு கொண்டு, பிறகு தன்னிடம் இருக்கும் அதே வங்கியின் இன்னொரு டெபிட் கார்டை கொடுத்து பணம் எடுக்க முடியவில்லை என கூறிவிட்டு சென்றுள்ளார்.
ஆனால் சிறிது நேரத்தில் 29 ஆயிரம் ரூபாய் எடுக்கப்பட்டதற்கான குறுஞ்செய்தி வரவே அதிர்ச்சியடைந்து எம்கேபி நகர் காவல்நிலையத்தில் ஜாக்லின் புகார் அளித்தார்.
ஏற்கெனவே இதேபோல பல புகார்கள் வந்து இருந்ததால், இந்த திருட்டில் ஒரே நபர்தான் ஈடுபட்டுள்ளார் என்பதை புரிந்து கொண்ட போலீசார், 50க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.
அப்போது திருட்டில் ஈடுபட்ட நபரின் ஸ்கூட்டர் வாகனத்தில் தேசியக்கொடி மற்றும் பிள்ளையார் சிலை ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு இருப்பதை கண்டுபிடித்த போலீசார், அதை வைத்து ஆவடி பீரங்கி தயாரிப்பு ஆலையில் டெக்னிசியனாக பணிபுரியும் பெரம்பூரை சேர்ந்த பிரபுவை மடக்கினர்.
பல பெண்களிடம் டெபிட் கார்டுகளை பிரபு மாற்றிக் கொடுத்து தொடர் திருட்டில் ஈடுபட்டதும், இதுபோல 271 டெபிட் கார்டுகளை அவர் தன் வசம் வைத்திருப்பதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
மத்திய அரசு ஊழியராக மாதம் 60 ஆயிரம் ரூபாய் வரை சம்பாதிக்கும் பிரபு, கடந்த 4 வருடத்திற்கு முன் தனது மகளை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ஒருவருக்கு திருமணம் செய்து வைத்ததும், அப்போது வரதட்சணையாக 25 சவரன் நகை, கார் ஆகியவற்றை அளித்ததும், வட்டிக்கு பணம் வாங்கி ஆடம்பரமாக திருமணத்தை நடத்தியதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
சுமார் 15 லட்ச ரூபாய்க்கு மேல் கடன் வாங்கி இருந்த பிரபு, வாங்கிய சம்பளத்தை பெரும்பாலும் வட்டிக்கே கொடுத்து வந்தது, கடந்த 6 மாதங்களுக்கு மேலாக ஏடிஎம் மையங்களுக்கு வரும் பெண்களை ஏமாற்றி நூதன திருட்டில் ஈடுபட்டது, திருடிய லட்சக்கணக்கான பணத்தை வாங்கிய கடனுக்கான வட்டியாகவே கொடுத்ததையும் போலீசார் கண்டுபிடித்தனர். இதையடுத்து பிரபுவை கைது செய்து, 271 டெபிட் அட்டைகளை போலீசார் மீட்டனர்.
பிரபு போலீசாரால் கைது செய்யப்பட்டிருப்பது குறித்த தகவல் கிடைத்து அதிர்ச்சி அடைந்த குடும்பத்தார், காவல்நிலையத்துக்கு வந்து கண்ணீர் விட்டு அழுததாகவும், இதை கண்ட பிரபு வேறு வழியின்றி தவறு செய்துவிட்டதாக கூறி, கண்ணீர்விட்டு மன்னிப்பு கோரியதாகவும் போலீசார் தெரிவித்தனர்.