மனைவியின் காதலனை கொலை செய்த கூலிப்படையை ஜாமீனில் எடுப்பதற்காக கொள்ளையில் இறங்கிய சிலந்தி மனிதன் போலீசில் சிக்கினான்...
சென்னை பூக்கடை காவல் நிலையத்திற்கு எதிரே உள்ள துணிக்கடை மற்றும் பேக் கடையின் கூரையை பிரித்து உள்ளே புகுந்த கொள்ளையன், சுமார் 7 1/2 லட்சம் ரூபாய் ரொக்க பணத்தை கொள்ளையடித்துச் சென்றதாக பூக்கடை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
பூக்கடை உதவி ஆணையர் பாலகிருஷ்ண பிரபு தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு, சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள சி.சி.டி.வி கேமரா பதிவுகளைக் கைப்பற்றி ஆய்வு மேற்கொண்டனர். அப்போது ஒரு நபர் ஆட்டோவில் கடையின் பின் பகுதிக்கு வந்து, கடையின் பின்பக்கம் உள்ள பல அடி உயர சுவர் மீது சிலந்தியை போல ஏறும் காட்சிகளும் பதிவாகி இருந்தது.
ஆட்டோ சென்ற இடத்தை வைத்து , ஆய்வு செய்த போது ஆட்டோவில் இருந்து இறங்கிய அவன் திருவல்லிக்கேணியில் நிறுத்தப்பட்டிருந்த ஷைலோ காரில் ஏறியது தெரியவந்தது.
கொள்ளையன் வந்த ஷைலோ கார் சென்ற வழித்தடங்களில் உள்ள சி.சி.டி.வி பதிவுகளை கண்காணித்த போது கொள்ளையன் பூக்கடைப் பகுதியில் உள்ள ஒரு லாட்ஜில் தங்கி கொள்ளைச் சம்பவத்தை அரங்கேற்றியது போலீசாருக்கு தெரியவந்தது.
கொள்ளையன் லாட்ஜில் கொடுத்திருந்த பெயர் மற்றும் தொடர்பு எண்ணை வைத்து பழைய குற்றப்பதிவேடுகளுடன் ஒப்பிட்டு பார்த்தபோது அவன் கர்நாடக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்த ஆனந்தன் என்பது கண்டுபிடிக்கப்பட்டது.
கொள்ளையன் பயன்படுத்திய சைலோ காரும் மதுரை நோக்கி பயணித்திருப்பதை வைத்து மதுரை விரைந்த தனிப்படை போலீசார் அங்குள்ள ஒரு லாட்ஜில் தங்கியிருந்த போது சுற்றி வளைத்து அவனை கைது செய்து சென்னை அழைத்து வந்தனர்.
கடந்த 2019-ஆம் ஆண்டு தனது மனைவியுடன் தகாத உறவில் இருந்த காதலனை கூலிப்படையை ஏவி கொலை செய்ததாகவும், சிறையில் இருக்கும் அவர்களை ஜாமீனில் வெளியே எடுக்க பணம் தேவைபட்டதால் கடைகளில் கொள்ளையடித்ததாக சிலந்தி மனிதன் ஆனந்தன் தெரிவித்தான்.
கைது செய்யப்பட்ட ஆனந்தனிடம் இருந்து கொள்ளையடித்ததில் செலவு செய்ததுபோக 4 லட்சம் ரூபாய் பணம், 3 செல்போன்கள், தொப்பி, Money Heist முகமூடி, கையுறை, கொள்ளைச் சம்பவத்தை அரங்கேற்றப் பயன்படுத்திய உபகரணங்கள் மற்றும் ஷைலோ கார் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
கொள்ளையடித்த பணத்தை வைத்து கொள்ளையன் ஆனந்தன் Written by Anand என்ற திரைப்படம் ஒன்றை எடுத்து பணமில்லாமல் பாதியில் நிறுத்தியதாகவும், போலீசார் தெரிவித்துள்ளனர்.