சென்னையில் மாநகராட்சி ஒப்பந்த ஊழியர் ஒருவர் ஆன்லைன் கடன் செயலி மூலம் 2500 ரூபாய் கடன் பெற விண்ணப்பித்த நிலையில் ஒரு வாரம் கழித்து 35 ஆயிரம் ரூபாய் பணம் கட்ட சொல்லி மிரட்டியதால் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
செயலி மூலம் 2500 ரூபாய் கடன் பெற விண்ணப்பித்ததும் பணம் வராததால் கடன் கிடைக்கவில்லை என்று இருந்துள்ளார். ஒருவாரம் கழித்து அவரை தொடர்புகொண்ட வடமாநிலத்தவர்கள் 2500 ரூபாய் கடனுக்கு வட்டியுடன் சேர்த்து 35 ஆயிரம் ரூபாயை 10 நிமிடத்திற்குள் செலுத்துமாறு கூறியுள்ளனர்.
பின்னர் வங்கியில் சென்று விசாரித்த போது கடன் கேட்டு விண்ணப்பித்த 3 நாட்களுக்குப் பிறகு அவரது வங்கிக் கணக்கிற்கு 2500 ரூபாய் பணம் வந்தது தெரியவந்தது. இதுபோன்ற கடன் செயலிகள் பதிவிறக்கம் செய்யும் போது மொபைல் போனை ஹேக் செய்வதற்கான அனுமதியுடன் வடிவமைக்கப்படுவதால், கடன் பெறுபவர்களின் மொபைல் போனில் உள்ள தகவல்களை முழுமையாக சேகரித்து வைத்துக்கொண்டு கடன் கொடுக்கின்றனர்.
மாநகராட்சி ஒப்பந்த ஊழியரின் குடும்பத்தினர் புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்து அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்களின் தொலைபேசி எண்ணிற்கு அனுப்பி மிரட்டியதால், மோசடி தொடர்பாக எம்.ஜி.ஆர் நகர் காவல் நிலையத்தில் அவர் புகார் அளித்துள்ளார்.