சென்னையில் தனியார் போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டவர் அடித்துக் கொல்லப்பட்டதாக கூறப்படும் புகார் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராயப்பேட்டையைச் சேர்ந்த ராஜி என்பவர் மதுபழக்கத்துக்கு அடிமையான நிலையில், அவரை மெட்ராஸ் கேர் சென்டர் என்ற போதை மறுவாழ்வு மையத்தில் குடும்பத்தினர் அனுமதித்தனர்.
சிகிச்சை முடிந்து வந்த அவர் மீண்டும் குடித்துவிட்டு வீட்டில் சண்டையிட்டதால், மறுபடியும் திங்கட்கிழமை இரவு எட்டரை மணியளவில் மறுவாழ்வு மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
இந்த நிலையில், நேற்றிரவு 9 மணியளவில் ராஜியின் மகன் மணிகண்டனிடம் தொலைபேசியில் பேசிய மறுவாழ்வு மைய ஊழியர்கள், ராஜி படியில் இருந்து தவறி கீழே விழுந்து இறந்து விட்டதாக தெரிவித்திருக்கின்றனர்.
நேரில் சென்று பார்த்த போது ரத்த காயத்துடன் தனது தந்தை இறந்து கிடந்ததாகவும், அடித்து துன்புறுத்தியதற்கான காயங்கள் இருப்பதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
தனது தந்தையை போல அங்கு சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட மற்றவர்களையும் மறுவாழ்வு மையத்தினர் அடித்து துன்புறுத்துவதாக அவர் தெரிவித்துள்ளார்.