சென்னை மாதவரம் அருகே சிமெண்ட் மூட்டைகளை ஏற்றிச் சென்ற லாரி, சாலையில் சென்றுக் கொண்டிருந்த போதே திடீரென தீப்பற்றி எரிந்தது.
திருவள்ளூர் மாவட்டம் வல்லூரில் உள்ள தனியார் சிமெண்ட் ஆலையில் இருந்து சிமெண்ட் மூட்டைகளை ஏற்றிக் கொண்டு, சென்னை சூரப்பட்டு நோக்கி லாரி சென்றுக் கொண்டிருந்தது.
மாதவரம் ரவுண்டானா அருகே வந்த போது இன்ஜின் பகுதியில் இருந்து திடீரென கரும்புகை வெளியேறுவதைக் கண்ட ஓட்டுநர் சிவக்குமார் லாரியை நிறுத்திவிட்டு கீழே இறங்கியதாக கூறப்படும் நிலையில், சிறிது நேரத்திலேயே லாரியின் முன்பகுதி தீப்பற்றி எரிந்துள்ளது.
தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த விபத்தில் லாரியின் முன்பக்க பகுதி முற்றிலுமாக சேதம் அடைந்தது. முதற்கட்ட விசாரணையில், லாரியின் பேட்டரியில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக லாரி தீப்பற்றி எரிந்தது தெரியவந்துள்ளது.