சென்னை சவுகார்பேட்டையில் தங்க நகை பட்டறையில் 60 லட்ச ரூபாய் மதிப்பிலான தங்க கட்டிகளை திருடிச் சென்ற ஊழியரை போலீசார் தேடி வருகின்றனர்.
சென்னை வேப்பேரியை சேர்ந்தவர் ஜதீன்குமார். இவர் பூக்கடையில் உள்ள தனது நகை கடைக்கு தேவையான நகைகளை செய்வதற்காக, சவுகார்பேட்டையில் சொந்தமாக நகைப் பட்டறை நடத்தி வருகிறார். அந்த நகை பட்டறையில் மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த நபர் குமார் ஷா என்பவர் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வந்துள்ளார்.
நம்பிக்கைக்குரியவராக இருந்ததால் நகை பட்டறையின் மொத்த பொறுப்பையும் அவரிடம் கொடுத்திருந்தார். இந்த நிலையில் 60 லட்ச ரூபாய் மதிப்புள்ள ஒன்றரை கிலோ தங்க கட்டிகளுடன் குமார் ஷா திடீரென மாயமாகி உள்ளார்.
ஜதீன்குமார் அளித்த புகாரின் அடிப்படையில் 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து, குமார் ஷாவை யானைக்கவுனி போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.