சென்னையில் கோவில்கள் அருகே அமர்ந்து யாசகம் பெறுவது போல் கஞ்சா விற்பனை செய்த சாமியார் உட்பட 3 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
ஐஸ்ஹவுஸ் பகுதியில் காவி உடை அணிந்த சாமியார் ஒருவர் கஞ்சா வியாபாரம் செய்வதாக கிடைத்த தகவலை அடுத்து அங்கு மாறுவேடத்தில் சென்ற போலீசார்,கஞ்சா வாங்குவது போல சென்று கையும் களவுமாக அவரை கைது செய்தனர்.
விசாரணையில் அந்த நபர் ராயப்பேட்டை யானைக்குளம் பகுதியைச் சேர்ந்த 50 வயதான தாமு என்கிற சேகர் என்பதும், தலைப்பாகையிலும், காவி உடையிலும் கஞ்சாவை பதுக்கி விற்பனை செய்ததும் தெரியவந்தது.
மேலும் இவருக்கு கஞ்சா விற்பனை செய்த மொத்த வியாபாரிகளான தேனி மாவட்டத்தை சேர்ந்த ராஜா மற்றும் ஆசைதம்பி ஆகிய இருவரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 7 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.