சென்னையில் நிலம் வாங்குவதற்காக பெற்றோர் சிறுக, சிறுக சேர்த்து வைத்திருந்த 8 லட்சம் ரூபாயை திருடிய மகன்கள், அந்த பணத்தை ஆன்லைன் விளையாட்டுக்காக நண்பனின் குடும்பத்திடம் கொடுத்து ஏமாந்து போன சம்பவம் அரங்கேறியுள்ளது.
தேனாம்பேட்டையை சேர்ந்த மளிகைக்கடைக்காரர் ஒருவருக்கு பத்தாம் வகுப்பு படிக்கும் மகனும், 12ஆம் வகுப்பு படிக்கும் மகனும் இருக்கின்றனர். இவர்களது வீட்டுக்கும் பக்கத்து தெருவில் வசித்து வந்த மத்திய அரசு ஊழியரான சேகர்ராஜ் - மெரிட்டா தம்பதியின் மகனும், மளிகைக்கடைக்காரர் மகன்களும் நண்பர்கள் ஆவர்.
ஒரு நாள் மளிகைக் கடைக்கு வந்த சேகர் ராஜ்-மெரிட்டாவின் மகன், கல்லாப்பெட்டியை பார்த்துவிட்டு அங்கு நிறைய பணம் இருப்பதாக தனது தாயிடம் கூறியிருக்கிறான். அப்போதில் இருந்தே மளிகைக் கடைக்காரர் மகன்கள் இருவரும் வீட்டுக்கு வந்தால் அன்போடு உபசரித்த மெரிட்டா, பணத்தை எடுக்க திட்டம் தீட்டி, இருவரையும் ஆன்லைன் விளையாட்டுக்கு அடிமையாக்கியதாக சொல்லப்படுகிறது.
பின்னாளில் பணம் இருந்தால் தான் ஆன்லைன் விளையாட்டு விளையாட முடியும் எனக் கூறி, இருவரையும் கடையில் இருந்து பணத்தை எடுத்துவரச் சொல்லி சிறுக, சிறுக பணம் பறித்ததாக கூறப்படுகிறது. பின்னர், பெற்றோருக்கு விஷயம் தெரிந்ததும் பணத்தை கேட்ட சிறுவர்களை மிரட்டிய நிலையில், சேகர் ராஜ், மெரிட்டா உட்பட 3 பேர் மீது வழக்குப்பதியப்பட்டுள்ளது.