சென்னை அடுத்த சோழிங்கநல்லூரில் கொலை செய்யும் நோக்கில் வீச்சரிவாளுடன் வீட்டில் பதுங்கியிருந்த சிறார் உட்பட 5 பேரை கண்ணகிநகர் போலீசார் கைது செய்தனர்.
சோழிங்கநல்லூர் குமரன் நகரிலுள்ள வாடகை வீட்டில் 5 பேர் தங்கியிருந்த நிலையில், அவர்கள் வீச்சரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் வைத்திருப்பதை பார்த்த வீட்டின் உரிமையாளர், கண்ணகிநகர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.
விரைந்து வந்த போலீசார் கண்ணகிநகரை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி, பெருங்குடியை சேர்ந்த பார்த்திபன் மற்றும் ஜெகன், சோழிங்கநல்லூரை சேர்ந்த ராஜராஜன் மற்றும் 17 வயதுடைய சிறுவனை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட கிருஷ்ணமூர்த்தி மீது கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ள நிலையில், முன்விரோதம் காரணமாக கண்ணகி நகரை சேர்ந்த ஒருவரை வெட்டிக் கொலை செய்வதற்காக நண்பர்களுடன் தங்கியிருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.