நிர்பயா திட்டத்தின் கீழ் சென்னையில் முதற்கட்டமாக 2 ஆயிரத்து 100 பேருந்துகளில் சிசிடிவி கேமராக்கள் மற்றும் பேனிக் பட்டன் பொருத்தும் பணிகள் நடைபெற்று வருவதாக போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பேருந்தின் உட்பகுதியில் 3 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும் எனவும், 4 இடங்களில் பேனிக் பட்டன் எனப்படும் அவசர கால அழைப்பான் பொருத்தப்படும் எனவும் தெரிவித்தார்.
பேனிக் பட்டன் அழுத்தப்பட்டால், அதற்கான தகவல் பணிமனைக்கு சென்று சேர்ந்து, போலீசார் உதவியுடன் உடனடியாக நடவடிக்கை எடுக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறினார்.
மேலும் மாணவர்கள் படிக்கட்டில் பயணம் செய்வதை தடுக்கும் வகையில் பள்ளி, கல்லூரி செல்லும் நேரத்தில் கூடுதல் பேருந்து இயக்குவது குறித்து ஆர்.டி.ஓ மூலம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு, ஆய்வு செய்யப்பட்டு வருவதாக அமைச்சர் தெரிவித்தார்.