சென்னை வேளச்சேரியில் விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் தங்கி இருந்த குடியிருப்புக்குள் வெள்ள நீர் புகுந்ததால், நாடாளுமன்றம் செல்ல டெல்லிக்கு புறப்பட்டவர் தண்ணீரில் நனையாமல் இருக்க தொண்டர்களின் உதவியுடன் சேர் விட்டு சேர் மாறி வந்து, இறுதியாக காரில் ஏறிச்சென்ற சம்பவம் அரங்கேறியது. வெள்ளத்துகே டஃப் கொடுத்த வேங்கை குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு.
சென்னையில் 2 நாட்களாக கொட்டித்தீர்த்துவரும் கனமழையால் தாழ்வான பகுதிகளில் மழை நீர் வெள்ளம் போல தேங்கி உள்ளது. இதற்கு விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் திருமாவளவனின் குடியிருப்பும் விதி விலக்கல்ல.
சென்னை வேளச்சேரியில், தமிழ் நாடு வீட்டுவசதி வாரிய குடியிருப்பு காலனியில் முதலாவது அவென்யூவில் வசித்து வரும் சிதம்பரம் தொகுதி எம்பி திருமாவளவன், நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக அவசர அவசரமாக புறப்பட்டார். மேல்தளத்தில் இருந்து கீழே வந்து பார்த்த போது சுமார் 2 அடி உயரத்துக்கு வெள்ள நீர் குடியிருப்புக்குள் புகுந்திருந்தது.
வழக்கமான உடையலங்காரத்துடன், காலில் ஷூ அணிந்திருந்ததால் தண்ணீரில் நனையாமல் எப்படி வெளியில் நின்றிருந்த காரில் ஏறுவது என்று யோசித்தார்.
அவரது தொண்டர்கள் தாங்கள் தூக்கிச்செல்வதாக கூறிய நிலையில், அதனை மறுத்து, பார்வையாளர்களுக்காக போடப்பட்டிருந்த இரும்பு இருக்கையின் மீது ஏறி நின்று தண்ணீரில் நனையாமல் காருக்கு செல்வது என்று முடிவெடுத்தார்.
அதன்படி அந்த இருக்கைகளின் மீது திருமாவளவன் ஏறி நிற்க பக்கபலமாய் நின்ற தொண்டர்கள் தாங்கள் நனைந்தாலும் பரவாயில்லை என்று அவரை அப்படியே இரும்பு சேரோடு நகர்த்திச்சென்றனர்.
ஒவ்வொரு இருக்கைகளாக மாறி மாறி ஏறி வந்த திருமாவளவன். தனது காலில் அணிந்திருக்கும் ஷூ நனையாமல் வெளியே நின்றிருந்த காரை வந்தடைந்தார்
வெள்ள நீர் படாமல், இரும்பு சேரில் இருந்து லாவகமாக காருக்குள் ஏறி வெள்ளத்துக்கே ட்ஃப் கொடுத்த திருமாவளவன், நாடாளுமன்ற கூட்டத்தில் பங்கேற்க டெல்லி செல்வதற்காக விமான நிலையம் புறப்பட்டார்
தற்போதைய மழை மட்டுமல்ல எந்த மழைக்காலமாக இருந்தாலும் திருமாவளவனின் குடியிருப்புக்குள் மழை நீர் புகுந்து விடுவதாகவும், மோட்டார் வைத்து தான் மழை நீரை வெளியேற்றுவதாகவும் தெரிவித்த அவரது ஆதரவாளர்கள், குடியிருப்பையொட்டி பள்ளிக்கூடம் இருப்பதால் திருமாவளவன் தனது குடியிருப்பை உயர்த்தாமல் வைத்திருப்பதாகவும் தெரிவித்தனர்.
வெள்ளச்சேரியாக காட்சி அளிக்கும் வேளச்சேரியின் இந்த பகுதி மட்டும் அல்ல நகரில் எந்த பகுதிகளில் எல்லாம் மழை நீர் செல்ல வழியின்றி வெள்ளக்காடாக காட்சி அளிக்கின்றதோ அங்கெல்லாம் ஆக்கிரமிப்புகளை அகற்றி மழை நீர் வடிகால் அமைத்து மழை நீர் வெள்ளம் போல தேங்காமல் இருக்க நிரந்தர தீர்வு காணவேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.