சென்னை மணலி புதுநகர் பகுதியில் கொசஸ்தலை ஆற்றங்கரையில் விரிசல் ஏற்பட்டு வெள்ளம் ஊருக்குள் புகுந்த நிலையில், வெள்ளத்தின் நடுவே சிக்கியவர்களை படகுகள் மூலம் போலீசார் மீட்டனர்.
மாநகராட்சியின் 15 மற்றும் 16வது வார்டு பகுதிகளை ஒட்டிய கொசஸ்தலை ஆற்றின் கரை உடைந்து ஆர்.எல்.நகர். ஜெனிபர் நகர் உள்ளிட்ட பகுதிகளை வெள்ளம் சூழ்ந்தது.
குடியிருப்புகளுக்குள் தண்ணீர் புகுந்து அந்த இடமே தீவு போல் மாறிய நிலையில், சிறப்பு அதிகாரி கணேசன் ஐஏஎஸ், எம்.எல்.ஏ சுதர்சனம் உள்ளிட்டோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
ஏரியின் கரை உடைந்த பகுதியில் மணல் மூட்டைகளைக் கொண்டு அடைக்கலாம் என்று திட்டமிட்ட நிலையில், தண்ணீர் அதிகம் வந்ததால், அது கைவிடப்பட்டது.
இதனையடுத்து குடியிருப்புவாசிகளை படகு மூலம் போலீசாரும் தீயணைப்புத்துறையினரும் மீட்டு அழைத்து வந்தனர். இப்பகுதி தாழ்வான பகுதி என்று கூறப்படும் நிலையில் ஆற்றின் கரைகள் முறையாகப் பராமரிக்கப்படுவதில்லை என குற்றம்சாட்டப்படுகிறது.