சென்னை கொரட்டூர் ரெயில்வே ஊழியர் குடியிருப்புக்குள் மழை நீருடன் கலந்த கழிவு நீர் புகுந்ததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டு குடியிருப்புவாசிகள் இருளில் தவித்து வருகின்றனர். மர்மமாளிகை போல காட்சி அளிக்கும் குடியிருப்பில் வசிக்கும் மக்களின் பரிதாபம் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு..
சென்னை கொரட்டூர் பிரதான சாலையில் மூன்று தளங்களை கொண்ட பழமையான ரெயில்வே ஊழியர் குடியிருப்பு உள்ளது. பெரும்பாலான குடியிருப்புகளை அதன் உரிமையாளர்கள் வாடகைக்கு கொடுத்துள்ளனர். இதில் 100 குடும்பத்தினர் வசித்து வந்த நிலையில் கடந்த 3 தினங்களாக கொட்டித்தீர்த்த கனமழையால் இந்த குடியிருப்பை மழை நீர் சூழ்ந்தது. தரை தளத்தில் உள்ள வீடுகளுக்குள் கழிவு நீருடன் கலந்த மழை நீர் புகுந்ததால் அதில் வசித்தவர்கள் தங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை எடுத்துக் கொண்டு வெளியேறி விட்டனர்.
மின்சாரம் துண்டிக்கப்பட்ட நிலையில் முதல் மற்றும் இரண்டாம் தளங்களில் வசிப்போர் எமர்ஜென்ஸி விளக்குகளை எரியவிட்டு தங்கியுள்ளனர்.
மர்ம மாளிகை போல காட்சி அளிக்கும் அந்த குடியிருப்பில் இருந்து மாற்று இடம் தேடி பலர் இடம் பெயர்ந்து சென்றுவிட்ட நிலையில், அதில் தங்கி இருப்போர் தங்கள் பகுதியை சுற்றி தேங்கியுள்ள கழிவு நீர் கலந்த மழை நீரை விரைந்து அகற்றவும் , மின்சாரம் வழங்கவும் விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
கொரட்டூர் மோகன் கார்டன் பகுதியில் முழங்கால் அளவுக்கு தேங்கிய மழை நீரை மாநகராட்சி அதிகாரிகள் அதிவேக சக்தி கொண்ட நீர் உறிஞ்சும் மோட்டார்களை கொண்டு நீரை அகற்றினர்