சிலைக் கடத்தல் வழக்குகளில் ஒரு வழக்கு மட்டுமே முடிவுக்கு வந்துள்ளதாகவும், மற்ற வழக்குகளில் சொல்லும்படியான எந்த முன்னேற்றமும் இல்லை எனவும் சென்னை உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.
சிலைக் கடத்தல் தொடர்பான 41 வழக்குகளின் ஆவணங்கள் மாயமானது குறித்து விசாரிக்கக் கோரிய வழக்கு தலைமை நீதிபதி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தபோது, 25 வழக்குகள் தொடர்பான ஆவணங்களைக் கண்டுபிடித்துள்ளதாகச் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு அளித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
அதே சமயம் சிலைக் கடத்தல் தொடர்பான 16 வழக்குகளில் ஆவணங்கள் கண்டுபிடிக்கப்படாதது குறித்து நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர். பல வழக்குகளில் சிலைகளை மீட்கவில்லை என்றும், கடத்தப்பட்ட சிலைகளை மீட்கவும் குற்றவாளிகளைத் தண்டிக்கவும் தீவிரம் காட்டவில்லை எனவும் கூறிய நீதிபதிகள், விசாரணையை 4 வாரங்களுக்குத் தள்ளிவைத்தனர்.