இந்தியாவின் இரண்டாவது குடியரசுத் தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான செப்டம்பர் 5 ஆசிரியர் நாளாகக் கொண்டாடப்படுகிறது.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியை அடுத்துள்ள வெங்கடாபுரத்தில் வீராசாமி, சீதம்மா ஆகியோருக்கு மகனாக 1888 ஆம் ஆண்டு செப்டம்பர் ஐந்தாம் நாள் பிறந்தார் ராதாகிருஷ்ணன். திருத்தணி ஆலமரத் தெருவில் உள்ள தொடக்கப்பள்ளியில் படித்தார்.
சென்னைப் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்று அதே பல்கலைகழகத்தில் ஆசிரியராகவும் பணியாற்றினார். 1952 முதல் 1962 வரை குடியரசுத் துணைத் தலைவராகவும், 1962 முதல் 1967 வரை குடியரசுத் தலைவராகவும் பதவியில் இருந்தார்.
திருத்தணியில் அவர் படித்த தொடக்கப்பள்ளி இப்போது நடுநிலைப்பள்ளியாகச் செயல்பட்டு வருகிறது. திருத்தணி அரசு ஆண்கள் மேனிலைப் பள்ளிக்கும் அவர் பெயர் சூட்டப்பட்டுள்ளது. அந்தப்பள்ளியில் அவரது முழு உருவ வெண்கலச் சிலையும் உள்ளது. அவர் குடியிருந்த வீட்டில் சிறுவர் காப்பகமும் நூலகமும் செயல்பட்டு வருகிறது.